8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

--

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி திட்ட இயக்குநர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிட்டது மத்திய அரசு.இத்திட்டத்தில் விவசாய நிலங்களை, அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இவ்வழக்கில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும், நிலம் கையகப்படுத்த தடை விதிப்பதோடு, கையப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து திட்ட இயக்குநர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் எவ்வித பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் கடந்த விசாரணையின் போது கண்டனம் தெரிவிக்கப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை இன்று மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இன்றைக்கு மத்திய அரசு அறிக்கையை தாக்கல் செய்யாத பட்சத்தில், வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed