பார்வைத்திறன் குறைந்தோர் மருத்துவர் ஆக முடியுமா? “ உச்சநீதிமன்றம் ஆய்வு

டில்லி

நிரந்தர பார்வை குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர் ஆக முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு நடத்த உள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவர் புருஷ்வானி அசுதோஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு விடுமுறைக்கால மனு அளித்துள்ளார்.   அதில், “நான் தற்போது நீட் தேர்வு உடல் ஊனமுற்றோர் சலுகையில் எழுதி உள்ளேன்.  அதில் நான் அகில இந்திய அளவில் 419ஆவது இடம் பிடித்துள்ளேன்.  அதனால் எனக்கு உடல் ஊனமுற்றோர் சலுகையில் மருத்துவர் அல்லது பல் மருத்துவர் ஆக கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் லலித் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது.   அப்போது அரசு தரப்பில், “மாணவர் கூறி உள்ள சலுகை விதிகள் மற்ற படிப்புக்களுக்கு மட்டுமே பொருந்தும்.  ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளை நேரில் பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.  அதனால் பார்வைத் திறன் குறைந்தோருக்கான சலுகைகளை மருத்துவக் கல்வி பயில அனுமதிக்க முடியாது என வாதிடப்பட்டது.

இதை ஒப்புக் கொண்ட நீதிமன்ற அமர்வு, “கல்வி பயிற்றுவித்தல், சட்டம் போன்ற துறைகளுக்கு பார்வைத் திறன் குறைந்தோருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் மருத்துவக் கல்விக்கு இந்த விதி விலக்கு பொருந்துமா என்பது தெரியவில்லை.  அதனால் இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.  உச்சநீதிமன்றம் இது குறித்து ஆய்வு நடத்தும் “ என கூறி உள்ளது.