டில்லி

ரு இஸ்லாமியப் பெண் பருவமடைந்தால் மட்டும் திருமணம் செய்யத் தகுதி உள்ளவர்  ஆகிறாரா என்பதைக் குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது.

இந்திய சட்டப்படி திருமணம் செய்துக் கொள்ள ஒரு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் ஆகி இருக்க வேண்டும்.   அதற்கு முன்பு நடக்கும் திருமணங்கள்  சட்டப்படி செல்லாதவை ஆகும்.  ஆனால் இஸ்லாமியச் சட்டப்படி ஒரு பெண் பருவமடைந்தால் திருமணத்துக்குத் தகுதி பெற்றவர் என உள்ளது.   அதே நேரத்தில் 1954 ஆம் வருடச் சிறப்பு திருமணச் சட்டத்தின் படியும் 2006 ஆம் வருட குழந்தைகள் திருமணத் தடைச் சட்டத்தின்படியும் இந்த திருமணம் செல்லாதது ஆகும்.

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 16 வயதுப் பெண் 24 வயதான  ஒரு வாலிபரைத் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.  இருவரும் இஸ்லாமியராக மாறி திருமணம் செய்துக் கொண்டதை எதிர்த்து பெண்ணின் தந்தை அம்மாநிலத்தில் உள்ள பெஹ்ராய்ச் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   அந்த வழக்கில் பெண்ணின் தரப்பில் தங்கள் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்ததால் தான் பருவம் அடைந்துள்ளதால் திருமணத்துக்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம் இந்த திருமணத்தை தடை செய்ததையொட்டி அந்தப் பெண்ணின் திருமணம் ரத்து செய்யப்பட்டு அவர் பெண்கள் இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.  அந்தப் பெண்ணின் கணவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அளித்த ஆட்கொணர்வு மனுவில் அந்தப் பெண்ணுக்கும்  தனக்கும் திருமணம் முடிந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.   அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது.  அத்துடன் அந்த பெண் மைனர் என்பதால் அவர் பெண்கள் இல்லத்தில் 18 வயது வரை தங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அந்தப் பெண் உச்சநீதிமன்றஹ்ட்தில் மேல்முறையீட்டு மனு அளித்துள்ளார்.  அந்தப் பெண்ணின் வழக்கறிஞரான துஷ்யந்த் பரஷார், “அலகாபாத்  உயர்நீதிமன்றம் இந்தப் பெண்ணின் திருமணத்தை ரத்து செய்தது செல்லாது.   உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஹாதிய மற்றும் சஃபியா ஜகான் வழக்கில் இஸ்லாமியச் சட்டப்படி ஒரு பெண் பருவம் அடைந்திருந்தால் திருமணத்துக்குத் தகுதி பெற்றவள் எனக் கூறப்பட்டுள்ளது.  எனவே இது குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, இந்திரா பானர்ஜி  மற்றும் அஜய் காஷ்யப் ஆகியோர் இது குறித்து இரு வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.   அத்துடன் உச்சநீதிமன்றம் இஸ்லாமியச் சட்டம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.