தொகுதி மறுவரைவு மற்றும் இட ஒதுக்கீடுகள் முழுமைப்பெறாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என திமுக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. இது தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு 2ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் உத்திரவாதம் அளித்திருந்தது. அப்போது திமுக தரப்பில் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன், தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட விதிகளை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை நிறைவேற்றி, அறிவிப்பாணையை விரைந்து வெளியிட உச்சநீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அறிவுருத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் நகர பகுதிகளை தவிற்த்து இதர பகுதிகளில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது.

உள்ளாட்சித் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டது. அதில், தொகுதி மறுவரையரை, வார்டு மறுவரையரை, இட ஒதுக்கீடுகள் முடிவுப்பெறாத நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டிருந்து.

இவ்வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம், புதிய மாவட்டங்களை சேர்ந்த வாக்காளர்கள் தொடர்ந்த வழக்கையும், திமுகவின் வழக்கையும் இன்று விசாரிக்க உள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்கப்படுமா ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.