உச்சநீதிமன்ற தீர்ப்பு டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது.: அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி

ச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

டில்லியில்  அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டில்லி அரசுக்கும் துணை நிலை ஆளுனருக்கும் இடையில் நிர்வாகம் குறித்த மோதல் எழுந்தது. இதையொட்டி டில்லி அரசு டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் டில்லி ஒரு யுனியன் பிரதேசம் எனவும் அதன் ஆட்சி நிர்வாக அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உள்ளது எனவும் கடந்த 2016 ஆம் வருடம் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து டில்லி அரசு பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தது. இந்த வழக்கில் சட்டம் மற்றும் அர்சியல் அமைப்பு சட்டம் தொடர்பான வினாக்கள் உள்ளதால் வழக்கு அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என டில்லி அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பூஷன் மற்றும் சிக்ரியின் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

அந்த தீர்ப்பில் ”லஞ்ச ஒழிப்புத் துறை டில்லி அரசின் கீழ் வரவில்லை. மாறாக மத்திய அரசின் கீழ் வருகிறது. மின் துறை, வருமானத் துறை ஆகியவற்றில் அதிகாரிகளை நியமிக்கவும் இட மாறுதல் செய்யவும் டில்லி அரசுக்கு உரிமை உள்ள போதிலும் இதில் ஏதும் கருத்து வேறுபாடு இருந்தால் அதில் இணை நிலை ஆளுநர் முடிவே இறுதியானது.

அதை போலவே விவசாய நிலங்களின் மதிப்பை முடிவு செய்ய டில்லி அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால் அது குறித்த விசாரணைக் கமிஷன் எதையும் அமைக்க டில்லி அரசுக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசுக்கே அந்த அதிகாரம் உண்டு” என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாள்ர்களிடம், “பாஜகவின் மத்திய அரசால் டில்லி ஆம் ஆத்மி அரசு கடும் துயரங்களை அனுபவித்து வருகிறது. இந்த தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது. நாங்கள் இதற்கான அரசியல் தீர்வை கோர முடிவு செய்துள்ளோம். இது டில்லி மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும்.

ஒரு அரசால் தனது அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியவில்லை எனில் அந்த அரசு எவ்வாறு இயங்கும்? சட்டப்பேரவையில் 67 இடங்கள் வென்ற கட்சிக்கு இல்லாத பல உரிமைகள் மூன்று இடங்களை வென்ற கட்சிக்கு இருக்கிறது. எங்களுடைய அரசில் ஒரு பாதுகாப்பு காவலரைக்கூட இடமாற்றம் செய்ய முடியாத நிலையில் நாங்கள் இன்று இருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.