டில்லி குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயக வெற்றி : ப சிதம்பரம்

டில்லி

டில்லி அரசின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டில்லி அரசு ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் அளுநருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளதாகவும் மாநில அரசுக்கு அதிகாரங்கள் இல்லை எனவும் சர்ச்சை எழுந்தது.   இது குறித்து ஆம் ஆத்மி கட்சியால் தொடரப்பட்ட வழக்கில் டில்லி உயர்நீதிமன்றம் கவர்னருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.   இதை எதிர்த்து ஆம் ஆத்மி அளித்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், “டில்லிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க இயலாது என்பது சரிதான்.   ஆனால் அனைத்து முடிவுகளையும் ஆளுநர் மட்டுமே எடுக்க முடியும் என்பது தவறானது.   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முடிவுக்ளை எடுக்க உரிமை உண்டு.   அதற்கு ஆளுநர் உதவி புரிய வேண்டும்.  அரசு தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.   அதற்கான அதிகாரம் டில்லி மாநில அரசுக்கு உண்டு.” என குறிப்பிடப் பட்டிருந்தது.

இதை ஒட்டி பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கும் டில்லி முதல்வருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.   அவ்வகையில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் டிவிட்டரில் நீதிமன்ற தீர்ப்பை பாராட்டி பதிவுகள் பதிந்துள்ளார்.

அவர் தனது பதிவுகளில் ”இந்த தீர்ப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவான தீர்ப்பு.   இதை நான் பெரிதும் வரவேற்கிறேன்.  டில்லி துணை நிலை ஆளுநர் ஏன் தனது அரசியல் முதலாளிகளால் தன்னை தவறாக நடத்த அனுமதிக்கிறார்?

ஒரு உள்துறை அமைச்சராக நான் டில்லி துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கன்னா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உடன் பணி புரிந்துள்ளேன்.  அப்போது எந்த விதமான ஒரு கருத்து மோதலோ குழப்பமோ ஏற்படவில்லை.

தற்போதைய மோதல் பாஜக மற்றும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.  அதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் ஒரு பாடத்தினை கற்பித்துள்ளதாகவும் தெரிவித்துளார்.