பெங்களூரு

நாடெங்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும்  அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தணிக்கை அறிக்கையைத் தொடர்ந்து அறக்கட்டளையின் 4 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்,

பெங்களூருவில் கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் 13 அன்று அட்சய பாத்திரா என்ற தனியார் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அரசின் மதிய உணவுத் திட்டத்தைத் தனியார்-அரசு கூட்டு முறையில் அமல்படுத்துவதற்கான முன்னணி கூட்டு நிறுவனமாக அட்சய பாத்திரா தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் 12 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்களிலும் 19,039 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 18 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது.

கடந்த 2019-20ம் ஆண்டில் அட்சய பாத்திரா அறக்கட்டளை ரூ 248 கோடியை அரசு மானியமாகவும், ரூ 352 கோடியை நன்கொடைகளாகவும் பெற்றிருக்கிறது. மேலும் 2025-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணியை எடுத்துக் கொள்வதாக இந்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.

அட்சய பாத்திராவில் தொடக்கம் முதலே அறங்காவலர்களாக இருந்த முன்னாள் இன்ஃபோசிஸ் இயக்குநர் மோகன்தாஸ் பய், அபய் ஜெயின், வி பால கிருஷ்ணன், ராஜ் கொண்டூர் ஆகியோர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

மோகன்தாஸ் பய் இது குறித்து, “மிக முக்கியமான நிர்வாகப் பிரச்சனைகளைப் பல முறை எழுத்துப் பூர்வமாக முன் வைத்த பிறகும் அவை தீர்க்கப்படவில்லை. மோசமான நிர்வாக பிரச்சனைகளைத் தீர்க்காமல் இருந்ததாலும், சுயேச்சையான அறங்காவலர்களுக்கு பதிலாக நிர்வாகத் தரப்பு நபர்களைப் பெரும்பான்மையாக நியமிப்பது ஆகியவற்றைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளோம்.” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றும், சுயேச்சையான நபர்கள் பெரும்பான்மையாக இருக்கும்படி அறங்காவலர் குழு மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான அட்சய பாத்திராவின் தணிக்கைக் குழுவின் 7 பக்க அறிக்கையிலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்களை உள்ளதாகக் கூறப்படுகிறது. அடிப்படையான நிதிக் கட்டுப்பாடுகள் இல்லாமை, நிதி ஒழுங்கு இல்லாமை, அறக்கட்டளைக்கும் கோயில் அறக்கட்டளைகளுக்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாமல், நலன்களின் முரண், பதிவுகளும் தணிக்கை முறைகளும் இல்லாமை, ஆகியவற்றைத் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

தணிக்கைக் குழு, ”அட்சய பாத்திரா அறக்கட்டளையில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை, இஸ்கான், பெங்களூரு, டச்ஸ்டோன் அறக்கட்டளை போன்ற கோயில் அறக்கட்டளைகளின் முக்கியமான நிர்வாகிகள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளது, தீவிரமான முரண்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அட்சய பாத்திரா வழங்கும் உணவுக்கான செலவு, பிற நிறுவனங்கள் வழங்கும் அதே போன்ற உணவுக்கான செலவை விட அதிகமாக இருப்பதைத் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அத்துடன் “சமையல் கூடங்களை நடத்தும் கோயில் அறக்கட்டளைகள் அட்சய பாத்திரா அறக்கட்டளைக்குப் பொறுப்பாகப் பதில் சொல்வதில்லை” என  குற்றம் சாட்டி உள்ளது.

தணிக்கைக் குழுவின் உறுப்பினராக இருந்து பதவி விலகிய ராஜ் கொண்டூர் பல்வேறு அட்சய பாத்திரா மையங்களில் இருந்து முறைகேடுகளைத் தெரிவிக்கும் புகார்கள் எங்களுக்கு வந்தன. ஆய்வு செய்து பார்த்ததில், சில சரியான குற்றச்சாட்டுகளாக நிரூபணமாயின. மற்றவை இன்னும் ஆய்வில் உள்ளன. இந்தப் பிரச்சனைகள் தீர்க்க முயற்சி செய்வதற்கு பதிலாக இஸ்கான் தொடர்புடைய அறங்காவலர்கள் இது தொடர்பான விசாரணைக்குத் தடை போடுவது, பழி வாங்குவது என்று தணிக்கை அறிக்கையின் கண்டுபிடிப்புகளைப் புறக்கணித்தனர்” எனக் கூறி உள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் சஞ்சலபதி தசா தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்னாள் தணிக்கைக் குழு உறுப்பினரான சுரேஷ் சேனாபதி, “கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் முழு உண்மையை வெளிப்படுத்தவில்லை. மிகத் தீவிரமான இந்த விஷயங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஆனால் இது தொடர்பாக ஊடகங்களில் விசாரணை கூடாது” எனப் பதில் அளித்துள்ளார்.

தணிக்கை அறிக்கையில், “அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தலைவர் மது பண்டிட் தாசாவும், துணைத் தலைவரும் கோயில் அறக்கட்டளைகளின் அறங்காவலர்களாகவும் இருப்பது தீவிரமான ஐயத்தை ஏற்படுத்துகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளிலிருந்து ஒதுங்கியிருக்க அவர்கள் முன் வராதது நியாயமான விசாரணையை உறுதி செய்யத் தடைகளை ஏற்படுத்துகிறது.  அத்துடன் விசாரணையின் அடிப்படையில் சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுப்பதையும் அது தடுக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் ஒப்பந்தத்தைத் தமிழ்நாடு அரசு அட்சய பாத்திரா அறக்கட்டளைக்கு வழங்கியது.  இது தொடர்பாக மதிமுக தலைவர் வைகோ தமிழக அரசைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர், “அட்சய பாத்திரா வழங்கும் உணவில் வெங்காயம், பூண்டு சேர்ப்பதில்லை” என்றும் “முட்டையும் தவிர்க்கப்படுகிறது” என்றும் சுட்டிக் காட்டிய அவர், தமிழ்நாட்டில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டியிருந்தார். உணவு வழங்கும் பணியை அட்சய பாத்திராவுக்கு அளிப்பது “சத்துணவுத் திட்டத்தை மனு தர்ம உணவுத் திட்டமாக மாற்றி விடும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.