மிகக்குறைவான வறட்சி நிவாரணம்! தமிழக விவசாயிகள் அதிர்ச்சி!

டில்லி:

மிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2096 கோடி வழங்கலாம் என மத்திய குழு பரிந்துரை செய்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கர்நாடக  அரசு, தான் அளிக்க வேண்டிய காவிரிநீரை தர மறுக்கிறது.  ஆந்திராவும்,  தண்ணீர் அளிக்க முடியாது என கைவிரித்துவிட்டது.

இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது. நிரின்றி தங்கள் பயிர் கருகுவதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது.

இந்த நிலையில், வறட்சி நிவாரணமாக 39,565 கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு  கோரியது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மத்தியக்குழு அதிகாரிகள் தமிழகம் வந்து வறட்சி நிலவரத்தை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் இன்று மத்தியக்குழு ரூ. 2096 கோடி அளிக்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.  துணைக்குழுவோ 1748 கோடி ரூபாய் அளிக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

இது குறித்து மத்திய அரசு நாளை அறிவிக்கும்.

மிகக்குறைவான தொகையை மத்தியக்குழு பரிந்துரை செய்திருப்பது தமிழக விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த விவசாய சங்க நிர்வாகி தெய்வசிகாமணி, “தமிழக அரசு கேட்டதில் ஐந்து சதவிகிதத்தை மட்டுமே மத்தியகுழு பரிந்துரை செய்திருக்கிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் தற்கொலைகளை தொடரச்செய்யும்” என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

அனைத்துவிவசாயசங்கத்தின் பி.ஆர்.பாண்டியன், “மத்தியக்குழு மிகக்குறைவான தொகையை பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  தமிழகத்தின் வறட்சியை, விவசாயிகளின் சூழலை மத்திய அரசு உணரவில்லை.  உணரச்செய்ய வைக்க மாநில அரசு முயலவில்லை. ஆகவே இது மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி என்பதையும் குறிப்பிட வேண்டும்” என்றார்.