டில்லி,

டந்த 1ந்தேதி நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்துள்ள பொது நிதி நிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அதில்,  “இந்த ஆண்டில் உலகிலேயே மிகப்பெரிய அளவில் 50 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும், ஒவ்வொருவரும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான காப்பீடு பெறலாம் இந்த திட்டத்துக்கான நிதி எதிர்காலத்தில் திரட்டப்படும்” என ஜேட்லி கூறியிருந்தார்.

இது குறித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில்  தேசிய சுகாதார திட்டத்தை கடுமையாகச் சாடியுள்ளார்.

அதில்,   தேசிய சுகாதாரத் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. திட்டத்துக்கு பணம் எங்கிருந்து வரும் எனக் கேட்டால், எதிர்காலத்தில் திரட்டப்படும் என நிதி அமைச்சர் அறிவிக்கிறார்.  பணம் திரட்டப்படும் எனக் கூறுவது என்பது வெற்றுவார்த்தை. வார்த்தை ஜாலம். இந்த திட்டத்துக்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்யவே இல்லை.

பணம் இல்லா திட்டம் என்பது, நூல் இல்லா பட்டத்தை வானத்தில் பறக்கவிடுவது போன்றதாகும். பட்டம் விடுபவர் வேண்டுமானாலும் பட்டம் பறக்கிறது எனச் சொல்லலாம். ஆனால், பட்டமும் இருக்காது, பட்டமும் பறக்காது.

இவ்வாறு  அவர் பதிவிட்டுள்ளார்.