ரயிலைப் பார்க்காத குழந்தைகளுக்காக ரயிலாக மாறிய வகுப்பறைக் கட்டடம்

புதுக்கோட்டை:
யிலைப் பார்த்திராத கிராமத்துப் பிள்ளைகளுக்காக புதுக்கோட்டை அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவரைத் தத்ரூபமாகத் தீட்டியிருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அன்றனி.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தைச் சேர்ந்தது லெக்கணாப்பட்டி. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அன்றனி. இவர், ஏற்கெனவே இப்பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் நூலகம், சுவர்களில் பாடங்கள், தனியார் பள்ளிகளை விஞ்சும் அறிவியல் திறனறிப் போட்டிகள் என முன்மாதிரிப் பள்ளி வளாகத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், ரயிலையே பார்த்திராத தனது ஏழை, எளிய, கிராமத்து மாணவர்களை ரயில் பயணத்துக்காகவே ராமேஸ்வரம் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை கொரோனா காலத்துக்கு முன்பு செய்திருக்கிறார்.

கொரோனா பொது முடக்கம் வந்ததால் இப்பயணம் தடைபட்டது. பள்ளி வளாகத்தையே ரயில் போல மாற்றினால் என்ன என முடிவெடுத்து, ரூ. 15 ஆயிரம் செலவு செய்து வண்ணங்களை வாங்கி வந்திருக்கிறார். பள்ளியின் ஓவிய ஆசிரியர் ஆர். ராஜேந்திரன், எழுத்தர் ராஜ்குமார் ஆகியோரின் கைவண்ணத்தில் இரு நாட்களில் ரயில் தயாரானது.80 அடி நீளம் கொண்ட தரைத்தளத்தின் 3 வகுப்பறை சுவர்கள் ரயில்களாயின. பள்ளிக் கூடம் திறந்ததும் ரயில் பற்றியும், ரயில் பயணம் பற்றியும் எம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன் என்கிறார் தலைமை ஆசிரியர் அன்றனி.