மதுரை:
சிலம்பட்டி தனியார் பள்ளி மாணவி, விடுதியில் தூக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி சுதர்சனா
 மாணவி சுதர்சனா

மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கும் தங்குவதற்கு விடுதி வசதி செய்து கொடுத்துள்ளது. இங்கு தேனி மாவட்டம், வருசநாடு சிரைப்பாறையைச் சேர்ந்தவர் சின்னன் என்பவர் மகள் சுதர்சனா அந்த பள்ளி விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்புப் படித்து வந்தார்.
நேற்று சுதரச்னா மற்ற மாணவிகளுடன் பள்ளிக்குப் சென்றவர், சிறிது நேரத்தில் புத்தகத்தை மறந்து ரூம்பில் வைத்துவிட்டேன், அதை எடுத்துவிட்டு வருவதாக கூறி விடுதி அறைக்கு சென்றார். வகுப்பு ஆசிரியர் வருகை பதிவேடு வாசித்தபோது, அறைக்கு சென்ற சுதர்சனா மீண்டும் வகுப்புக்கு திரும்பாதது தெரியவந்ததது.
இதனால் பள்ளி நிர்வாகத்தினர் சுதரச்னாவை தேடி விடுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது, சுதர்சனா தனது அறையில் உள்ள பேனில் சேலையால் தூக்கிட்ட நிலையில் இருந்தார்.
பள்ளி நிர்வாகத்தினர் உடனே அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள்  சுதர்சனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
பள்ளி மாணவி தற்கொலை குறித்து, உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் உடனே சம்பவம் நடைபெற்ற பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவி தங்கி இருந்த அறையை சோதனையிட்டபோது மாணவி எழுதி வைத்த கடிதம் கிடைத்தது.
அதில்  ‘‘என்னுடன் இருக்கும் சக மாணவிகள் என்னை கருப்பு, பெரிய மூக்கு என்று கேலி பேசினர். என் சாவுக்கு காரணம் இவர்கள்தான். விடுதியில் எனது பெட்டியில் ரூ.560 சேமிப்பு பணம் வைத்திருக்கிறேன். அந்தப் பணத்தை எனது அப்பா, அம்மாவிடம் கொடுத்து விடுங்கள். இந்த ஆண்டு படிப்பிற்கு என் பெற்றோர் கஷ்டப்பட்டு பள்ளியில் பணம் கட்டினர். அந்த பணத்தை என் பெற்றோரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும்,’’ என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.
மாணவி தற்கொலை செய்தி அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. சுதர்சனாவின் பெற்றோர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து சுதர்சனாவில் உடலை பார்த்தனர்.
அதன்பிறகு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.
மனுவில்  எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது.   கடந்த சனி, ஞாயிறு விடுமுறைக்கு ஊருக்கு வந்தவள், திங்கள்கிழமைதான் பள்ளிக்கு வந்தாள். வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தவள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை. புதன்கிழமை காலையில் சுதர்சனா காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக பள்ளி நிர்வாகத்தினர்  எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது அவள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர்.
தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் எனது மகளின் உடலில் ரத்த காயங்கள் உள்ளன. சீருடை முழுவதும் ரத்தக் கறைகள் உள்ளன.  அவரது சாவில் சந்தேகம் உள்ளது.
எனவே பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனகோரி  அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன்  ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, அதன்  அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.