பள்ளி மாணவன் மூலம் மனித கழிவு அள்ள வைத்த விவகாரம்! அரசு பள்ளி ஆசிரியைக்கு 5ஆண்டு சிறை!

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவன் மூலம் மனித கழிவு அள்ள வைத்தது தொடர்பாக,  அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி  ஆசிரியைக்கு 5ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா்  அருகே உள்ள ஒரு பள்ளியில், கடந்த 2015 நவம்பா் மாதம், வகுப்பறையில் இருந்த ஒரு மாணவா் திடீரென மலம் கழித்து விட்டதாக தெரிகிறது. அந்த மலத்தை ஆசிரியை விஜயலட்சுமி என்பவர், அதே வகுப்பில் படித்து வந்த பட்டியலின மற்றொரு மாணவரை கட்டாயப்படுத்தி மலத்தை அகற்ற சொன்னதாக  கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், மாணவரின் பெற்றோர்  காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பான வழக்கு, நாமக்கல் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டையும் விதித்து நீதிபதி கே.தனசேகரன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து ஆசிரியை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.