பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும்! ஐகோர்ட்டு அதிரடி

--

சென்னை:

மிழக பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளிலும் மாதம் 1 முறை வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் 29 மற்றும் ஏப்ரல் 30ம் தேதிகளில் நடந்தது. சுமார் 7 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள்  ஜூலை 1ம் தேதி வெளியானது. இதில் சுமார் 4.93 லட்சம் பட்டதாரிகள் 150க்கு 90 என்ற தேர்ச்சி மதிப்பெண்ணை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இத்தேர்வில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. அதற்கு சமஸ்கிருதம் மற்றும் வங்க மொழி இரண்டிலும் குழப்பம் இருந்த தால் தேர்வு எழுதிய ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த  7ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதி மன்றம், வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா? அல்லது வங்க மொழியில் எழுதப்பட்டதா ? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பின்னர் வங்க மொழியில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை  கடந்த 13ந்தேதி  நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்த பதில் மனுவில், வந்தே மாதரம் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு, வங்கமொழியில் எழுதப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.‘

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சென்னை ஐகோர்ட்டு, தமிழக பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்றும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாட வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.