சென்னை: தமிழகத்தில் 25 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனையால், நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 25 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் தற்போதுள்ள மாணாக்கர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணாக்கர்களை மாற்றம் செய்வதற்கு அருகிலுள்ள பள்ளியின் விபரம், அதன் தரம் ஆகியவற்றை புள்ளி விபரமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு ஆசிரியர் கூட்டணிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டன. அப்போது பள்ளிகளை மூட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்போது எந்தக் காரணமும் சொல்லாமல் 25 மாணாக்கர்களுக்கு குறைவான பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பது ஏன் என்பதை விளக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.