21ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

டெல்லி:  நாடு முழுவதும் வரும் 21ந்தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த சமயத்தில், வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட் டுள்ளது.

வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளி திறப்பின்போது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வர 21 ஆம் தேதி முதல் மாணாக்கர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  இதற்குப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியமான ஒன்றாகும்.

இந்நிலையில் வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவை,

1. நாற்காலிகள் மற்றும் மேசைகள் 6 அடி இடைவெளியுடன் அமைக்கப்பட வேண்டும்.

2. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு இடையே தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கவும் கிருமிநாசினி பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.

3. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

4. மடிக்கணிணி, நோட்டு புத்தகங்கள் போன்ற்வற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் கதவுகள், நாற்காலிகள், பெஞ்சுகள், கழிப்பறை மற்றும் மாடிப்படிகளின் கைப்பிடிகளை அடிக்கடி கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம், அதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.