கொழும்பு

கொரோனா தொற்று இல்லாததால் இலங்கையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன

இலங்கையில் கடந்த மார்ச் மத்தியில்  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  அதையொட்டி அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.    அதன் பிறகு  வெகுநாட்கள் மூடப்பட்டிருந்த பள்ளிகள்  ஜூலை மாதம் திறக்கப்பட்டன.   ஆயினும் கொரோனா இரண்டாம் அலை குறித்த எச்சரிக்கைகள் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

தற்போது இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  கல்வித்துறை செயலர் சித்ரானந்தா, “இன்று அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.  பள்ளிகளில் தனிமனித இடைவெளிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.   இதில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் சமூக இடைவெளியுடன் தினமும் இயங்கலாம்.

ஆனால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது கடினமாகும்.  ஆகவே எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் வர வேண்டும் என்பதைப் பள்ளி நிர்வாகம் முடிவெடுத்து அதன்படி செயல்படலாம்,   ஆனால் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை பள்ளி உணவகங்கள் இயங்கக் கூடாது” என அறிவித்துள்ளார்.