ஈரோடு: வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 19ந்தேதி முதல், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது,

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளும்  வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் என்றார். மேலும், பிளஸ்2 மாணாக்கர்கள்,  நீட் தேர்வுக்கான பயிற்சி பெறும் வகையில்,  மாலை 6 முதல் 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், போதுமான அளவில் வேலை நாட்கள் இல்லாததால் 60 விழுக்காடு பாடத்தை நடத்த முடியாது என்ற கல்வியாளர்களின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், நாள்தோறும் ஒவ்வொரு கருத்தை கல்வியாளர்கள் கூறிவருவதாகவும், மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.