மெல்பர்ன்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வாசன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

 

சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுமார் 31000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   நேற்று இந்த வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட வுகான் பகுதியில் 69 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   அவர்களில் ஒருவர் இந்த வைரஸ் தாக்குதலைக் கண்டறிந்த மருத்துவர் ஆவார்.

இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகின் பல நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன.   இதில் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் உள்ள டொஹர்டி இன்ஸ்டிட்யூட் பரிசோதனை மையமும் ஒன்றாகும்.    இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த எஸ் எஸ் வாசன் என்பவர் உள்ளார்.  இவர் இந்திய வம்சாவளியினர் ஆவார்.

இந்த ஆய்வு குறித்து ஆய்வு மையம், “தற்போது நடந்து வரும் ஆய்வில் ஆஸ்திரேலியா விலங்குகள் நல ஆய்வகத்துடன் நடத்திய சோதனையில் இந்த வைரஸின் தன்மை,, குறித்துத் தெரிய வந்துள்ளது.  இது தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகும்.    இந்த வைரஸ் எத்தனை நாட்களில் வளர்ச்சி அடைந்து பரவுகிறது. அது எவ்வாறு பரவுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.” எனவும் அறிவித்துள்ளது.

வாசன் இந்தியாவில் பிலானி நகரில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் ஆகிய கல்வி நிலையங்களின் முன்னாள் மாணவர் ஆவார்.   ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகள் நடத்தி பட்டம் பெற்றுள்ளார்.

வாசன் தலைமையிலான குழு தடுப்பு மருந்து கண்டுபிடித்து இன்னும் 16 வாரங்களுக்குள் மனிதர்களிடம் சோதனைகள் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.   சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் கிட்டத்தட்ட 24 நாடுகளில் பரவி உள்ளதாகவும் 240 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதால் தடுப்பு மருந்து பணி முழு விச்சில் நடந்து வருகிறது.