சுதந்திரமாக எனது வீட்டுக்குள் வரும் ஒரே நபர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: தமது வீட்டுக்குள் சுதந்திரமாக வரக் கூடிய ஒரே நபர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 22 எம்எல்ஏக்களோடு விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜக பக்கம் சாய்ந்தார். இதையடுத்து, அம்மாநிலத்தில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது.

சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பெங்களூருவில் உள்ளனர் என்பதை அறிந்த காங்கிரஸ் கட்சி, சஜ்ஜன் சிங் வர்மா உள்ளிட்ட தலைவர்களை அங்கே அனுப்பியது. பெங்களூருவில் சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்களை சஜ்ஜன் சிங் வர்மா சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நான் சந்தித்த எம்எல்ஏக்களில் யாரும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன் செல்லத் தயாராக இல்லை. தாங்கள் தவறாக வழிகாட்டப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டோம். பாஜகவுடன் சேர தங்களுக்கு விருப்பமில்லை என்றும் அவர்களில் பெரும்பாலானோர் கூறினார்கள் என்று கூறினார்.

இந் நிலையில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகல் குறித்து, ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அப்போது அவர் கூறியதாவது:

கல்லூரிக் காலத்தில் இருந்து தனது நண்பராக இருப்பவர் சிந்தியா. அவர் எழுப்பிய எந்தக் கேள்வியையும் தான் அலட்சியம் செய்தது இல்லை. தமது வீட்டுக்குள் சுதந்திரமாக வரக் கூடிய ஒரே நபர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தான் என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக, கட்சியை விட்டு வெளியேறும் முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்க முயன்றேன். ஆனால் எனக்கு அனுமதியோ, அவகாசமோ வழங்கப்படவில்லை. ராகுல் காந்தியிடம் பேச முயன்றேன், ஆனால் அவர் அனுமதிக்கவில்லை என்று சிந்தியா கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் பேட்டியின் மூலம், சிந்தியா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என்பது புலப்படுகிறது. பொதுவாக ஒருவர் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும்போது இதே போன்றதொரு வாதத்தை தான் பயன்படுத்துவார்கள்.

அதே போன்ற ஒரு காரணத்தை தான் சிந்தியாவும் கூறி இருக்கிறார். இதற்கு முன்பு இதே போன்று சச்சின் பைலட் கட்சியில் இருந்து சென்ற போது இப்படியாக ஒரு காரணத்தை கூறி இருந்தார் நினைவி கூரத்தக்கது.