சென்னை

ஜெயலலிதா மறைந்து 9 மாதங்கள் ஆகியும் அவருக்குப் பின் யார் தங்களை வழி நடத்துவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என ஆங்கில செய்தி தளம் Scroll.in தெரிவித்துள்ளது

ஆங்கில செய்தித் தளமான ஸ்கிரோல். இன் என்னும் இணையதளத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் காணப்படுவதாவது :

”ஜெயலலிதா பல தவறுகள் செய்ததாக கூறப்பட்டாலும், அவருடைய மறைவுக்குப் பின்னும் அவருடைய தாக்கம் இன்னும் தமிழக அரசியலில் உள்ளது.  கடந்த தேர்தலில் பல ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து ஜெயலலிதா வெற்றி பெற்றார்.  மாறி மாறி இரு கழகங்களையே தேர்ந்தெடுத்து வந்த மக்கள் இப்போது அதிமுக வையே அடுத்த முறையும் தேர்ந்தெடுத்தனர்.  32 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த இந்த நிகழ்வு ஜெயலலிதாவை சரித்திரத்தில் இடம் பெற செய்தது.

ஆனால் அந்த வெற்றியே இன்றைய குழப்பங்களுக்கு காரணமாகி விட்டது.  ஜெயலலிதா தனக்குப் பின் யார் என்பதை கட்சியில் யாருக்குமே தெரிவிக்கவில்லை.  தவிர யாரையும் அவர் அந்த அளவுக்கு நம்பவும் இல்லை.  அதனாலேயே அவர் மறைவுக்குப் பின் யார் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துவது என்னும் குழப்பம் ஒன்பது மாதங்கள் ஆகியும் ஒரு முடிவுக்கு வரவில்லை.  அதனாலேயே கட்சி இரண்டானது.  அதைத் தொடர்ந்து வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பினால் மேலும் குழப்பம் உண்டானது.  பல ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் தற்போது ஜெயலலிதா குற்றவாளி என வந்த தீர்ப்பும், அந்த தீர்ப்பினால் அவரது தோழி, சசிகலா சிறை சென்றதும், இரண்டான கட்சியை மூன்றாக பிளந்தது.

பிறகு பலராலும் தமிழகத்தை நிழலாக ஆளும் கட்சி என சொல்லப்பட்ட பா ஜ க வின் முயற்சியால் இரு அணிகள் இணைந்தன.  இன்னாள் முதல்வர் பழனிச்சாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தனர்.  அந்த அணியின் தலைவராக உள்ள தினகரனுக்கும் சட்டசபை உறுப்பினர்கள் சிலரின் ஆதரவு உள்ளதால் பழனிச்சாமியின் அரசு கவிழலாம் என்றே சொல்லப்படுகிறது.  எப்படியும் தேர்தல் வந்தால் திரும்ப ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்னும் நம்பிக்கை அதிமுக வின் எந்த அணிக்கும் இல்லாததால் மத்திய அரசை அனுசரித்துப் போக அணிகள் திட்டமிட்டுள்ளன.  ஆனால் பழனிச்சாமியின் அணி அரசில் தொடர்வதை தினகரன் அணி விரும்பவில்லை.

ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியில் இன்று வரை சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.  இடைத் தேர்தலும் பண முறைகேடு நடந்ததாக சொல்லி ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும் மேலும் குதிரைப் பேரங்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது.

எதிர்க்கட்சியான திமுக தற்காலிக கவர்னரை சந்தித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அவரை வற்புறுத்தப் போவதாகவும், அது நடக்கவில்லை எனில், நீதிமன்றத்தை அணுகவும் உத்தேசித்துள்ளது.  மக்கள் இன்று வரை தங்களை காக்க ஒரு அரசு இங்கு அமையவில்லை என்பதை அறிந்துள்ளனர்.  குதிரைப் பேரம் என்பது அரசியல்வாதிகள் தங்களின் பதவியை காப்பாற்ற மட்டுமே என்பதையும் புரிந்துக் கொண்டுள்ளனர்.  இனியாவது தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டை ஆளப்போவது யார் என்பதை அவசியம் முடிவு செய்தாக வேண்டும்”

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.