டில்லி

மீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நாடெங்கும் வீட்டில் இருந்து பணி புரிவோருக்கு நன்மை தரும்படி அமைந்துள்ளது.

 

கார்மெண்ட் தொழிற்சாலை என அழைக்கப்படும் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலை நாடெங்கும் ஏராளமாக உள்ளன. இவற்றில் பல தொழிற்சாலைகளில் வீட்டில் தையல் இயந்திரம் வைத்திருக்கும் பெண்கள் பணி புரிகின்றனர். அவர்களுக்கு வீட்டில் இருந்தே பணி புரியத் தொழிற்சாலை அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவர்களுக்குத் தொழிற்சாலை வழங்கும் எவ்வித சலுகையும் பெற முடியாத நிலை உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வீட்டில் இருந்தே பணி புரிவதால் அவர்களுக்கு நிறுவன ஊழியர் என்னும் அந்தஸ்து தரப்படுவது இல்லை என்பதே ஆகும். இந்த தொழிற்சாலையில் பணி புரிவோர் சுமார் 1.2 கோடிப்பேர் உள்ளனர். ஆனால் வீட்டில் இருந்து பணி புரிவோர் இதைப் போல் பல மடங்கு உள்ளனர். உலகெங்கும் பல நாடுகளில் இந்த நிலை உள்ளது. இவர்கள் கண்ணுக்குத் தெரியாத பணியாளர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கோதாவரி கார்மெண்ட்ஸ் என்னும் தொழிற்சாலையில் வீட்டில் இருந்து பணி புரிந்த ஒரு பெண் தனக்கு ஓய்வூதியம் கேட்டு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டதால் அவர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பல கட்ட முறையீடுகளைத் தாண்டி உச்சநீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில் மனுதாரர் இந்தியத் தொழிலாளர் சட்டம் 1991 இன் கீழ் மனு அளித்திருந்தார்.

தொழிற்சாலை நிர்வாகம் வீட்டில் இருந்து பணி புரிவதை யாரும் செய்ய முடியும் எனவும் அதை எந்த ஒரு மேலாளரின் கண்காணிப்பில்லாமல் செய்யப்படுவதால் அது நிறுவன ஊழியரின் பணி எனக் கூற முடியாது என வாதிட்டது. உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்து வீட்டில் இருந்து தைக்கப்படும் துணிகளில் பல தவறு காரணமாக ஒப்புதல் அளிக்காமல் உள்ளதைச் சுட்டிக் காட்டியது. எனவே அது மேலாளர் கட்டுப்பாட்டில் உள்ள பணி எனத் தீர்மானித்தது.

அதையொட்டி உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஓய்வூதியம், அபராதம் மற்றும் நீதிமன்ற செலவு உட்பட ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம் வீட்டில் இருந்து பணி புரியும் அனைவரும் நன்மை அடைய வாய்ப்புள்ளதாக இந்த உத்தரவுக்குப் பல ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.