உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான தேதி அறிவிப்பு டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் குறித்த அனைத்து அறிவிப்புகளையும், அறிக்கையாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு உரிய மறுவரைவு செய்யப்படாத நிலை இருப்பதாக ஏற்கனவே திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது உரிய இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவரான செ.கு தமிழரசன், துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது விரைவில் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.