சென்னை:

டல் சீற்றம் காரணமாக அலைகள் அதிக உயரத்துக்கு எழ வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடல் சீற்றம் அதிகரித்துள்ளதன் காரணமாக, அலைகள் மிக உயரமாக எழும் என்பதால்,  யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், இந்தியா கடல் சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையின் படி தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல்சீற்றமாக காணப்படும் என்று கூறியுள்ளார்.

இதனால் அலைகளின் உயரம் எட்டே கால் அடி முதல், பதினொன்றரை அடி வரை இருக்கும் என்றும், கன்னியா குமரி முதல் ராமநாதபுரம் வரையிலான கடற் பகுதியில் அலைகள் 11 அடி உயரத்திற்கு மேலாக எழும் என்றும் கூறி உள்ளர்.

எனவே கன்னியாகுமரி, ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள்,  இன்று காலை முதல் நாளை இரவு வரை எச்சரிக்கையாக இருக்குமாறும், யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆனால் இது சுனாமி கிடையாது என்றும்  தெளிவுபடுத்தியுள்ளார்.

கடல் சீற்றம் காரணமாக  படகுகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு சேதமாவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.