சென்னை:

மிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி,  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய சட்டப்பேரவையில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என  வலியுறுத்தி பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பின்னரே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து,  சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டப்படி செல்லும் என்று விளக்கமளித்தார்.

மேலும், 2010ம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தொழிற்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் அளித்த பதிலுரை ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர்,  ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க முயற்சிக்கு 230 ஏக்கர் நிலத்தை வழங்கியது மு.க.ஸ்டாலின்தான் என்றும்,  இந்த உண்மை வெளியே தெரிந்துவிடக்கூடாது என திமுகவினர் அஞ்சுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் அதிமுக அரசு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.