புதுடெல்லி:

கடன் வழங்குவதில் ரூ. 1,730 கோடி மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐசிஐசி வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்திரா கோச்சர், அவரது கணவர் மற்றும் தொழிலதிபர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.


இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம்120பி(சதி), 420(மோசடி) பிரிவு 7(லாப நோக்கு) 13(2) (கிரிமினல் நடவடிக்கை), 13(1)(டி) திட்டமிட்டு பயன்பெறுதல்) ஆகிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியை தன் கணவர் தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோருடன் சேர்ந்து சந்திரா கோச்சார் செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

பல கட்டங்களாக வேணுகோபால் தூத் இயக்குனராக இருந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததில், ரிசர்வ் வங்கியின் விதி அப்பட்டமாக மீறப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, மேலும் சில நிறுவனங்களுக்கு விதியை மீறி கணவர் தீபக் மூலம் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தன் அதிகாரத்தை சந்திரா கோச்சர் தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.