சென்னை: திமுகவுடனான பேச்சுவார்த்தை  மகிழ்ச்சிகரமாக இருந்தது என கூறிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இன்று தொகுதிப்பங்கீடு தொடர்பாக முத்ல்கட்ட பேச்சு வார்த்தையை  நடத்தியது.

திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்  இடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது,  திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி  கலந்து கொண்டனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில், முன்னாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன் தீப் சிங் சுர்ஜிவாலா, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி “திமுகவுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்” என கூறினார்.

இன்று முதன்முதலாக நடைபெற்ற திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.