பிப்ரவரி 13ந்தேதி முதல் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள்  கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ந்தேதி தொடங்கிய நிலையில், 2ம் டோஸ் தடுப்பூசி போடும் பணி வரும் 13ந்தேதி தொடங்குகிறது.

நாடு முழுவதும் முதல்கட்டமாக மருத்துவர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்  இதுவரை மொத்தம் 41.38 லட்சத்துக்கும் அதிகமான முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,45,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் (பிப்ரவரி 4ந்தேதி)   12,494  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அவர்களில், 12,285 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 209 பேருக்கு கோவாக்ஸின்  தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல்டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 21 நாட்கள் கழித்து 2வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தடுப்பூசியின் செயல்பாடு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பிப்ரவரி 13ந்தேதி  முதல் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கப்பட உள்ளது.