புதுடெல்லி: இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை இருக்கும் என்றும், கொரோனா வைரஸ் பரவல் அடுத்த 2021ம் ஆண்டிலும் தொடரும் என்றும் பேசியுள்ளார் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர்.ரந்தீப் குலேரியா.

மேலும், தற்போதைய நிலையைப் போலவே, தினசரி தொற்று எண்ணிக்கை விகிதம் அப்போதும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“கொரோனா பரவல் குறையும் முன்னதாக, அடுத்த சிலபல மாதங்களுக்கும், தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கும். அடுத்த 2021ம் ஆண்டில் இந்த நோய் மறைந்துவிடும் என்பதை நம்மால் கூறமுடியாது. ஆனால், அதன் தாக்கம் சிறிதுசிறிதாக குறையும் என்றும் நம்மால் கூற முடியும்.

அடுத்தாண்டின் துவக்கத்தில் பரவலின் தாக்கம் குறைய வேண்டுமென்றும் நாம் சொல்லும் நிலை இருக்க வேண்டும். நமது மக்கள்தொகை அதிகம் என்பதால், நமது எண்ணிக்கை அதிகமாக தெரியலாம். ஒரு மில்லியனுக்கு எத்தனை பேர் என்று ஒப்பிடும்போது, நம் நாட்டில் பரவலின் தாக்கம் குறைவே.

நமது பரிசோதனை திறனை தற்போது அதிகரித்துக் கொண்டுள்ளோம். ஒருநாளில், தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமானோரை நாம் பரிசோதிக்கிறோம். அதிகளவு பரிசோதனையின் மூலம், அதிகளவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். தொடக்கத்தில், கட்டுப்பாட்டுடன் இருந்த பல பேர், தற்போது ‘போதும்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் என்பதையும் பார்க்க வேண்டும்” என்றார் அவர்.