கொரோனா இரண்டாவது அலை சுனாமியாக தாக்கும்… ஓராண்டுக்கு முன்னரே எச்சரித்த ராகுல் காந்தி..

 

உலகெங்கும் கொரோனா பரவல் .ஆரம்பித்த காலத்திலேயே, இந்தியா கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

முககவசம் அணிந்தால் போதும், வயதானவர்களுக்கு தான் வரும் என்றெல்லாம் அப்போது கூறிவந்த பா.ஜ.க.வினர், திடீரென்று மார்ச் 24 ம் தேதி நான்கு மணிநேர இடைவெளியில் நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவித்து கொரோனாவோடு இந்திய பொருளாதாரத்தையும் சேர்த்து அழித்துவிட்டதை கை கொட்டி கொண்டாடினார்கள்.

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்காமல் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி அப்போது வலியுறுத்தியபோது இதை விட ஒரு அரசாங்கம் வேறு ஏதும் செய்து விட முடியாது என்று வாழ்வில் வெளிச்சம் வந்து விட்டதாக தீபமேற்றி குதூகலித்தனர் பா.ஜ.க. வினர்.

உலக பணக்கார மற்றும் வல்லரசுகள் எல்லாம் இந்தியாவில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பணத்தை குவித்து தங்களுக்கு வேண்டிய தடுப்பூசிகளை அள்ளிச்சென்ற அதேவேளையில், உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் சொற்ப எண்ணிக்கையிலான தடுப்பூசிகளையே தன் பங்குக்கு நன்கொடைபோல் பெற்றுக்கொண்டது இந்தியா.

ஓராண்டுக்கு முன்னரே இதற்கான முதற்கட்ட பணியை மேற்கொண்டிருந்தால் இந்நேரம் இந்தியாவில் பெரும்பான்மையானோர் தடுப்பூசி பெற்றிருக்க கூடும்.

தற்போது சுனாமி போல் இரண்டாவது அலை மீண்டும் தாக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், இதனை எதிர்கொள்வதற்கான உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக பிரதமர் கூறிவருகிறார்.

அதேவேளையில், குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேஷ், பீகார், உத்தரகாண்ட உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சியினரின் கோரிக்கைக்கு செவிமடுத்து, அனைவரையும் உள்ளடக்கிய முன்னெடுப்பை மேற்கொள்ளாமல் அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருவதையே கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு சந்தித்து வரும் தொடர் தோல்விகள் உணர்த்துகிறது.

ஓராண்டாய் ராகுல் காந்தி சொல்வதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஊதுகுழலாக செயல்பட்ட ஊடகங்கள் கூட கடந்த சில நாட்களாக ராகுல் காந்தியின் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.