கொரோனா கதை திரும்புகிறதா சீனாவில் ?

பெய்ஜிங்: வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்புபவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட நோயாளிகளின் எண்ணிக்கை, படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து இந்த கட்டுரை எழுதும்போது (22 ஏப்ரல், புதன் வரையிலான நிலைமை) 1566 ஆக உயர்ந்தது. எனவே, சீனா தனது எல்லைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் முடுக்கி விட்டுள்ளது. மேலும், அறிகுறி இல்லாத கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் சீராக உயர்ந்து வருகிறது. எனவே, இரண்டாம் சுற்று கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் பாதிப்பு குறித்த அச்சம் சீனாவில் நிலவி வருகிறது. இந்நிலை நீடித்தால், சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நீடித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டுவரப்படும் என்று பெய்ஜிங்கில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தேசிய சுகாதார ஆணையத்தின் (என்.எச்.சி) செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் கடந்த திங்களன்று ஊடகங்களில் பேசுகையில், கடந்த ஞாயிறு வரை, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 951 ஆகும். இதற்கு காரணமாக எண்ணப்படுவது என்னவெனில், வெளிநாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சீனா தனது நாட்டினரை விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, சீனாவின் அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான தனது நாட்டு பிரஜைகளை மீட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் வருபவர்களிடம் இருந்து பரவும் கொரோனாவினால் சீனா மீண்டும் அதிக அழுத்தத்தை சந்தித்து வருகிறது என்றார்.

சீனா – ரஷ்யா எல்லையில் உள்ள துறைமுக நகரமான சூஃபென்ஹேயில் மட்டும் உறுதி செய்யப்பட நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆனதை தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். சுமார் 70,000 மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் தற்போது மூடப்பட்டு,  வெளிநாடுகளில் இருந்து சொந்த மண்ணிற்கு திரும்பும் சீனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. சீனா தற்போது இந்நகரில் வெளிநாட்டில் இருந்து வந்த 38 பேர்கள் உட்பட மொத்தம் 39 பாதிக்கப்பட்ட நோயாளிகளை பதிவு செய்துள்ளது. மேலும் குவாங்டாங் மாகாணத்தில் ஒரு உள்நாட்டு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனுடன் அறிகுறியில்லாத பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சீராக உயர்ந்து வருவதால், இரண்டாம் சுற்று கொரோனா குறித்த பாதிப்பு பற்றிய அச்சம் தேசிய சுகாதாராத்துறைக்கு எழுந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக முடங்கியிருந்த உற்பத்தி துறையை மீண்டு தொடங்கியிருந்த நிலையில், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஐந்து புதிய உள்நாட்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டது பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த ஞாயிறு வரை, பிரதான நிலப்பரப்பில், 78 பேர் புதிய அறிகுறியற்ற கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 40 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். இந்த 78 சேர்த்து இதுவரை, 1,047 அறிகுறியற்ற பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அறிகுறியற்ற கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது, வெளிப்படையாக, வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோன்றும் வழக்கமான எவ்வித அறிகுறிகளையும் காட்டாதவர்கள் ஆவர். ஆனால், இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும். மேலும் அவர்களால் வேறு ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படுத்த முடியும். இது மட்டுமின்றி, அதே கடந்த ஞாயிற்றுக்கிழமை, கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய மையமாக விளங்கிய, ஹூபே மாகாணத்தில் இருந்து ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இவருடன் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,331 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு வரை, பிரதான நாட்டில், ஒட்டுமொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,708ஐ எட்டியுள்ளது. இதில் 1,299 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்  77,078 நோயாளிகள் குணமடைந்தவர்கள் ஆவர்.  மேலும் 3,331 பேர் இந்த நோயால் இறந்தவர்கள் என்பதையும் தேசிய சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று, ஹாங்காங்கில் நான்கு பேரும், மக்காவோவில் 44 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும், தைவானில் 363 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 5 மரணங்கள் என்பது உட்பட 890 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் ஒரு நீண்டகாலத்திற்கு நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். ஒரு தலைநகர் என்பது சர்வதேச பரிமாற்றங்களுக்கு மையமாக விளங்குவதால், உலக அளவிலான, துரிதமாகப் பரவும் COVID-19 தொற்று நோயால், தலைநர் பெய்ஜிங் மிகப் பெரிய சுமையை தாங்க வேண்டியுள்ளதாக இங்குள்ள நகராட்சி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் காலத்தில் COVID-19 நோய் தடுப்பு மற்றும் கட்டுபாடுகளை தற்போதைக்கு நீக்கும் வாய்ப்புகள் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது கடைபிடிக்கப்படும் வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் பரவும் COVID-19 தொற்று நோய் மற்றும் உள்நாட்டு பரவுதலுக்கு எதிரான கட்டுபாடுகள் மற்றும் யுக்தியில் எவ்வித மாற்றமும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த பாதிக்கப்பட்டவர்கள் கண்டறிந்த போதிலும், நாடு முழுவதும் மற்றும் பெய்ஜிங்கில், அடிப்படையில் தொற்றுநோய் பரவுதல் கட்டுபடுத்தப்பட்டுள்ளதால், கட்டுபாடுகளுடன் கூடிய உற்பத்தி பணிகள் மற்றும் தயாரிப்பு பணிகளை அனுமதித்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை தளர்துவதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும் சின்ஹுவா தெரிவித்துள்ளார்.