அக்.4ல் கோட்டை முற்றுகை: போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் போராட்டம் அறிவிப்பு
சென்னை:
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் அக்.4ந்தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் மாதம் போக்குவரத்து சங்க தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். அதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 2.44 மடங்கு ஊதிய உயர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று கோரி வந்தனர்.
இதுதொடர்பான வழக்கில், நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்து விசாரணை மேற்கொண்டது. அவர் அரசு மற்றும் பஸ் தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் 2.44 மடங்கு ஊதிய உயர்வே போதுமானது என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வரும் அக்டோபர் 4ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொமுச பொருளாளர் நடராஜன், ‘ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தை என்ற முறையில் அரசு எங்களை ஏமாற்றி வருகிறது. நீதிமன்றத்திலும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த மாதம் கோட்டையை முற்றுகையிட முடிவு செய்தோம். கருணாநிதி மறைந்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து கூட்டமைப்புடன் ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் வரும் அக்டோபர் 4ம் தேதி கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.