Random image

ரஜினியின்  தர்பார்  ரகசியங்கள்!  எம்.பி.திருஞானம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, அரசியலுக்கு வருவாரா ? கட்சி ஆரம்பிப்பாரா ? 2021 சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி, போட்டியிடுமா ? தனித்துப் போட்டியிடுவாரா ? கூட்டணி அமைத்துப் போட்டியிடுவாரா ? அவரது அமைச்சரவை எப்படி இருக்கும் ? பி.ஜே.பி. பக்கம் சாய்வாரா? இப்படியாக… கலர் கலராக கொக்கிகளை மாட்டி, சமூக வலைத் தளங்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் செய்திகள் அனல் பறக்கிறது !

ரேட்டிங்கை எகிற வைக்க, பேசு பொருளாக்கி ஜமாய்க்கின்றன, தொலைக்காட்சிகள் !

‘தர்பார்’ படம் வெளியானதும், ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க மாட்டார் ! அரசியல் கட்சியை துவக்குவது தொடர்பான வேலையில் தீவிரமாக இருப்பார்… என்றெல்லாம், செய்திகள் ரெக்கை கட்டிப் பறந்தது !

இப்போது, ‘அண்ணாத்த’ திரைப்படம், இந்தியாவின் 18-வது பணக்காரரான கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் சார்பில், படுவேகமாகத் தயாராகிறது !

‘அண்ணாத்த’ திரைப்படம், “சூப்பர் ஸ்டார்” ரஜினியை மக்களது உறவுக்காரனாக, அண்ணனாக… ‘ஃபோக்கஸ்’ செய்யும் ! எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும்படியான “பஞ்ச்” டயலாக்குகள், நிறையவே இருக்கும் !

‘அண்ணாத்த’ படத்தில் டயலாக் வழியாக கோடிட்டுக் காட்டப்படும் விஷயங்கள் எல்லாமே, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஆட்சியின்… தர்பாரின்… கொள்கைகளாகவும், கோட்பாடுகளாகவும் இருக்கும் !


‘அண்ணாத்த’ படத்தின் தலைப்பு மட்டும்தான் நேற்று இறுதி செய்யப்பட்டது. ஆனால், கதையை 2018 மார்ச் 5-ம் தேதிக்கு முன்னதாகவே , அதாவது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட பிரபலங்களில் ஒருவரான ஏ.சி. சண்முகத்தின் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த சமயத்திற்கு முன்னதாகவே, தீர்மானித்து விட்டார் !

“தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை. இப்போது வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன். ஆண்டவன் நம் பக்கம் இருக்கிறான்… ” என்று, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி, தன்னை ஒரு ‘சூப்பர் லீடர்’ என்று, பிரகடனம் செய்தார் !

மேலும், அந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் “நான் எம்.ஜி.ஆர் இல்லே. ஆனா, நான் அவரைப்போல ஆட்சி செய்வேன்…” என்றும், திட்ட வட்டமாகக் கூறினார் !

கலைஞர் கருணாநிதியை ‘கிரேட் லீடர்’ என்று ரஜினி அவ்வப்போது சொல்வார் ! அவர் உயிரோடு இருந்த சமயத்தில்தான், தனது அரசியல் நுழைவு பற்றி, தனது ரசிகர்களின் மக்கள் மன்ற நிகழ்ச்சியில், அறிவிப்பு செய்தார் !

கலைஞர் கருணாநிதி உயிரோடு இப்போது இருந்தாலும், முற்றிலும் செயல்படமுடியாதவராகவே இருந்திருப் பார் ! திட்டமிட்டபடி, ரஜினியின் அரசியல் என்ட்ரி துவங்கித்தான் இருக்கும் ! இப்போது கருணாநிதி இல்லை என்பது, ரஜினிக்கு இருந்த தர்ம சங்கடங்களை, இல்லாமல் செய்துவிட்டது ! ஜெயலலிதாவும் இல்லை என்பது, கூடுதல் ப்ளஸ் பாய்ண்ட் !

‘சூப்பர் லீடர்’ ஆகிவிட்ட ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி, கை வீசிக்கொண்டு, அரசியலுக்கு அதிகாரபூர்வமாக வருவார் ! திட்டமிட்டபடி, ஆட்சியைக் கைப்பற்றுவார் !

சுதந்திரத்திற்குப்பிறகு, தமிழ்நாட்டில் 11 பேர் முதல்வராக இருந்துள்ளனர் ! எடப்பாடி பழனிச்சாமி 12-வது முதல்வர் !13-வது நபராக, தமிழக முதல்வராக, ரஜினி வருவார் !

அவரது தர்பார் நடவடிக்கைகள், காமராஜ், கக்கன்ஜி, எம்.ஜி.ஆர், நரேந்திர மோடி , கெஜ்ரிவால், ஏ. கே. அந்தோணி, உம்மன் சாண்டியை, நமக்கு நினைவுபடுத்தும் !

இப்போது நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்… அவரவர் துறையில் சாதனைகள் செய்து, ‘சபாஷ்’ பெற்று, ‘கிம்பர்லி’ வைரமாக மின்னும் பல பேர், ரஜினியின் தொடர்பில் கடந்த பல ஆண்டுகளாகவே இருக்கிறார்கள் ! அவர்கள்தான், ரஜினியின் தர்பாரை, ஆட்சியை, திட்டமிட்டு நடத்துவார்கள் !

ஆட்சித் தேரை ஓட்டுவது மட்டும், ‘சூப்பர் லீடர்’ ரஜினி !

● அடுத்த வெள்ளிக் கிழமை தொடரும்