பெங்களூரு:
 
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பெங்களூரு உள்பட பல பகுதிகளில்  இன்றுமுதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இடதுசாரி மற்றும் முஸ்லீம் அமைப்புகள் சார்பாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக இன்று பெங்களூரு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 144 தடை போடப்பட்டுள்ளது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.  டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும்  கல்லூரி மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பெங்களூருவிலும் கல்லூரிகள் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இன்று கர்நாடகாவில் முழு அடைப்புக்கு இடதுசாரி மற்றும் முஸ்லீம் அமைப்புகள்  அழைப்பு விடுத்திருந்தது. இந்த  நிலையில் அங்கு 3 நாட்கள்  144 தடை போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 6 மணி முதல் டிசம்பர் 21-ம் தேதி இரவு வரை மூன்று நாள்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கர்நாடாக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.