அமெரிக்க அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 25000 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 6 ம் தேதி நாடாளுமன்றத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறையில் 5 பேர் உயிரிழந்த நிலையில். மீண்டும் இது போன்றதொரு சம்பவம் நிகழாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகை, நாடாளுமன்றம் ஆகிய இடங்களை சுற்றி பல மைல் தூரத்திற்கு பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இவ்விரு கட்டிடங்களை சுற்றி வன்முறையாளர்கள் யாரும் ஏறமுடியாத வகையில் மிக உயரமான தடுப்பு அரண்கள் அமைத்து சுற்றிலும் கண்ணாடி இழைகளால் ஆன ஒயர்கள் பின்னபட்டிருக்கிறது.

வாஷிங்டன் ஏரியாவில் உள்ள விடுதிகளில் ஏர்பிஎன்பி நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

வாஷிங்கடன் செல்லும் பேருந்துகளிலும் கட்டுபாடுகள் விதித்துள்ளதோடு போக்குவரத்து நிறுவனம் ஒன்று தற்காலிகமாக பேருந்து சேவையை முடக்கியுள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பாதுகாப்பு படையினர் குறித்த முழுவிவரங்களையும் சேகரிக்கும் பணியில் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. மேற்கொண்டிரு்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தற்காலிக பொறுப்பில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பீட்டர் கைனர், “நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை” என்று கூறினார்.

அதேவேளையில் புதிய அதிபருக்கு வழங்கப்படும் அணிவகுப்பு மரியாதை மற்றும் விருந்து உபச்சார நிகழ்வுகள் ஒருசிலவற்றை தவிர பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் என்று 1000 பேருக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையை விட்டு நாளை காலை வெளியேறவிருக்கும் அதிபர் டிரம்புக்கு மேரிலேண்டில் உள்ள ராணுவ தளத்தில் பிரிவுபசார விழா நடைபெறுகிறது.

பைடன் பதவியேற்பு விழாவில் தாம் கலந்துகொள்ள போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கும் டிரம்ப் மேரிலாண்டிலிருந்து புளோரிடா செல்கிறார். துணை அதிபர் மைக் பென்ஸ் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறார்.