பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: வரலாறு காணாத பாதுகாப்பு

சென்னை:

சென்னை அருகே நடைபெறும்  பாதுகாப்புத்துறை கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அதன் காரணமாக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடிக்கு இன்று தமிழகத்தில் கருப்பு கொடி காட்டுவோம் என்று திமுக உள்பட எதிர்க்கட்சிகள், தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில், மோடி இன்று தமிழகம் வருகிறார்.

இதன் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையை அடுத்துள்ள ஈசிஆர் சாலையில்  திருவிடந்தை பகுதியில்  பாதுகாப்புத்துறை கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று தொடங்கி உள்ள  இந்த கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து பார்வையிட பிரதமர் மோடி இன்று  சென்னை வருகிறார். வரும் 14ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சி 268 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

47 நாடுகளின் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதற்காக 670 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா சார்பில் டாடா, எல் அண்ட் டி, மஹிந்திரா, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.இ.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் அணுகுண்டு தாக்குதலுக்குள்ளான இடங்களில் கதிர்வீச்சின் பாதிப்பை கண்டறியும் திறன் கொண்ட டாங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதே போன்று டாடா நிறுவனம் தயாரித்து வரும் எம்.பி.டி.வி. எனும் குண்டு வீச்சைத் தாங்கிச் செல்லும் கவச வாகனம் போன்றவைகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த  கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9.20 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி , கார் மூலம் கண்காட்சி மைதானத்திற்கு செல்கிறார்.

பாதுகாப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமான திறந்து வைத்து முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து  12 மணியளவில் மாமல்லபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் ஐ.ஐ.டி. ஹெலிபேடில் இறங்கி, வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையின் வழியே கேன்சர் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்புகிறார்.

பின்னர் 2 மணியளவில் விமான நிலையத்திலிருந்து டில்லி புறப்படுகிறார்.

கண்காட்சியின் இறுதிநாளான  14 ம் தேதி ராணுவ தளவாட கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையுடன் சென்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்து உள்ளதால், பிரதமர் மோடி சாலை பயணத்தை தவிர்த்து வான்வெளி பயணத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இசிஆர் சாலை பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை முதல் மாமல்லபுரம் வரை வரலாறு காணாத வகையில்  அனைத்து இடங்களிலும் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடும் சோதனைகளுக்கு பிறகே பொதுமக்களும், விமான பயணிகளும், வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Security beefed up for Modi’s visit to Chennai today, பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: வரலாறு காணாத பாதுகாப்பு
-=-