விராத் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி மற்றும் அணியின் இதர வீரர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசியப் புலனாய்வு அமைப்பினருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட தகவல் கிடைத்தது. அக்கடிதம் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படாத மொட்டைக் கடிதமாம்!

புலவாமா தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த சம்பவங்களை வைத்தே, மக்களைத் திசைதிருப்பி தேர்தலில் வென்றதாய் குற்றம்சாட்டப்படும் நரேந்திர மோடியின் அரசு, இரண்டாம் முறையாக பதவியேற்றது முதலே, பயங்கரவாதிகள் ஊடுருவல், தாக்குதல் அபாயம் மற்றும் தீவிரவாதிகளின் கொலை மிரட்டல் உள்ளிட்ட செய்திகள் தொடர்ந்து கசியவிடப்படுகின்றன.

இதனையடுத்து, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விராத் கோலி உள்ளிட்ட இந்திய அணியினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இக்கடிதத்தை எழுதியிருக்கலாம் என்று இந்திய ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் வீரர்கள் தவிர, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோரையும் மிரட்டி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.