குலாம் நபி ஆஸாத் மீதான தேசத்துரோக வழக்கு: டில்லி உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை

டில்லி:

காங்கிரஸ் மூத்த தலைவர்  குலாம் நபி ஆஸாத் மீது தொடுக்கப்பட்டுள்ள  தேசத்துரோக வழக்கு டில்லி உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் என்று அரசு மீது குற்றச்சாட்டுகள் கூறியதை எதிர்த்து, குலாம் நபி ஆசாத் மீது தேசத் துரோக வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது.

குலாம் நபி ஆசாத்

கடந்த ஜூன் 22ந்தேதி அன்று தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட குலாம் நபி ஆசாத், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில்  மேற்கொள்ளப்பட்டு வரும்  ராணுவ நடவடிக்கையில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை விட அதிகமான அளவில் பொதுமக்களைக் கொன்று வருவதாக தெரிவித்திருந்தார்.

இதை எதிர்த்தே டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பூஷன் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  குலாம் நபி ஆசாத் இந்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதாக கூறி அவர் மீது  இந்திய தண்டனைச் சட்டம் 124 (தேசத் துரோகம்), 120பி (குற்ற சதித் திட்டம்) மற்றும் 505 (1) (ராணுவம்/கடற்படை/விமானப்படை உயரதிகாரிகள் பற்றி கலகத்தை உண்டாக்கும்வகையில் தவறான வதந்திகளைப் பரப்பியது) ஆகிய பிரிவுகளின்கீழ் இவர் குற்றங்களைப் புரிந்ததாக தெரிவித்துள்ளார்.  ராணுவத்தை சித்திரவதை செய்யும் கொலைகாரர்கள் போல இவர் கூறியிருப்பது போரைவிட சற்றும் குறைந்ததல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டில்லி உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.