சபரிமலை விவகாரம் : அமித் ஷா மீது கலகத்தை தூண்ட  முயன்றதாக வழக்கு

டில்லி

பரிமலை விவகாரம் குறித்து பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கள் கலகத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நெடுநாட்களாக சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிப்பது கிடையாது.   அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்  உச்சநீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.   அந்த உத்தரவுக்கு நாடெங்கும் மிகவும் எதிர்ப்பு எழுந்தது.   குறிப்பாக கேரள மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்த மாதம் சபரிமலை நடை திறப்பின் போது சபரிமலைக்கு வந்த இளம்பெண்களை பக்தர்கள் போராட்டம்  நடத்தி மலை ஏற விடாமல் திருப்பி அனுப்பினர்.   அதை ஒட்டி கேரள அரசு அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது.   அத்துடன் அடுத்த மாதம் மண்டல பூஜை என்பதாலும் 48 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்பதாலும்  பெண்கள் அதிக அளவில் வரலாம் எனவும் அதனால் போராட்டங்கள் மேலும் வலுவடையும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது கருத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறானது என்னும் பொருளில் தீர்ப்பை கடுமையாக  கண்டித்துள்ளார்.   இது எதிர்க்கட்சியினருக்கு அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

அமித் ஷாவின் இந்த கருத்தை எதிர்த்து பீகார் மாநிலம் சீதாமர்கியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.   அந்த வழக்கை தொடர்ந்த சமூக ஆர்வலர் தாகுர் சந்தன் சிங், “பாஜக தேசியத் தலைவர் சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற ம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை கூறி உள்ளார்.  அவரது கருத்துக்கள் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

அவர் தனது கருத்துக்கள் மூலம் கலவரத்தை தூண்டி வரும் பொதுத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி  பெற அவர் இவ்வாறு எதிர்மறைக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.   தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவர் பெண்களின் உணர்வை கடுமையாக தாக்கி உள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.

கலவரத்தை தூண்டுதல், குற்றச் செயலுக்கு திட்டமிடுதல்,.  வழிபாடு தலம் செல்ல விரும்புவோர் உணர்வுகளை தனது பேச்சால் காயப்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் அமித் ஷா மீது வழக்கு தொடர வேண்டும் என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.