மோடியின் சாதனையை அண்ணாந்து பாருங்கள்….! தமிழிசை ‘அடடே’ பேச்சு

மதுரை:

மோடியின் சாதனையை அண்ணாந்து பாருங்கள்…. என்று மதுரையில் நடைபெற்ற பாஜக நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.  அவரது பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உதவியாள ரின் திருமணத்திற்கு 40 லட்சம் ரூபாய் தனி விமானத்தில் சேலம் செல்கிறார்.  தான் மட்டும் விமானத்தில் செல்ல வேண்டும். ஆனால், சாமானியன் செல்லக்கூடாது என ஸ்டாலின் நினைக்கிறார். சாமானியன் ஒவ்வொருவரையும் விமானத்தில் செல்ல வைப்பதுதான் மோடியின் சாதனை. எங்கள் மோடியின் சாதனையை அண்ணார்ந்து பாருங்கள் என்று கூறினார்.

மேலும், 4 வழிச்சாலை, 8 வழிச்சாலை தமிழகத்திற்கு தேவையில்லை என்று  கூறி வளர்ச்சி பணிகளை தடுத்து வருகிறார். 8 வழிச்சாலை வந்தால் 3 மணிநேரத்தில் மக்கள் சேலம் சென்று விடலாம். ஆனால், தற்போது மக்கள் 8-9 மணிநேரம் பயணித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் ஸ்டாலின் மட்டும் தனி விமானத்தில் சேலம் செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார்.. 40 லட்சம் ரூபாய் தனி விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின் தான்  ‘சேடிஸ்ட்’ ஸ்டாலின்” இவர் மோடியை சேடிஸ்ட் என சொல்ல அருகதை அற்றவர்.

இவ்வாறு பேசினார்.

அதைத்தொடர்ந்த பேசிய மத்திய அமைச்சர் பொன்னார்,  “இது கூட்டணி காலகட்டம். 1960-களில் தொடங்கி இதுவரை  திமுக எந்தவொரு கட்சியுடனும்  கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலைக் கூட சந்தித்தது கிடையாது.  தமிழக முதல்வராக கருணாநிதி 5 முறை இருந்திருக்கிறார். இன்றும் கூட கூட்டணி இல்லாமல் திமுகவால் ஒரு பஞ்சாயத்து தேர்தலைக் கூட ஜெயிக்க முடியாது” என பேசினார்.

தமிழிசையின் அண்ணாந்து பாருங்கள் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. அண்ணாந்து பாத்தால் வான்வெளிதான் தெரிகிறது… மோடி தெரிய வில்லை என்றும், அக்காவின் கண்களுக்கு ஆகாயத்தில் மோடி தெரிகிறாரா என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஒருவேலை மோடி அடிக்கடி பாரின் டூர்  பறப்பதால்… அக்கா அதை குறிப்பிட்டு சாதனையாக மோடி செல்லும் விமானத்தை  பார்த்து சொல்லியிருப்பாப்ல… என்றும் விமர்சித்து வருகின்றனர்.