சென்னை: சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையில் பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் பெயர்கள், அந்த இடங்களின் பெயர்களிலேயே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், அதிமுக அரசு, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கட்சித் தலைவர்களின் பெயர்களை சூட்டி வருகிறது.

அதன்படி,  சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும் ஆலந்தூர் மெட்ரோ என்பது அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்பதை புரட்சித்தலைவி ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்றும் பெயர் மாற்றம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டக் கோரி  கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,  சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மறைந்த முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. கருணாநிதியின் முயற்சியை வரலாற்றில் இருந்து மறைக்கும் நோக்கத்துடன் மற்ற தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. எனவே, தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.