வழக்கு பதிய பாஜக சதியே காரணம்!: சீமான் தாக்கு

--

சேலம்:

 வன்முறையை தூண்டுவதாக  தன் மீது வழக்குத் தொடரப்பட்டதற்கு , பாஜகவின் திட்டமிட்ட சதியே காரணம் என்று  சீமான் குற்றம்சாட்டி இருக்கிறார். .

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே  சில நாட்களுக்கு முன், நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய  சீமான்  வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக வழக்கு பதியப்பட்டது.   அவர் மீது சட்டப்பிரிவு எண் 124A, 153A, 153B, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இதனால் அவர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டு பெரிதும் துன்புறுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், நெய்தல் படை அமைக்கப்பட்டு மீனவர்கள் பாதுகாக்கப்படுவர். அப்படையில் மீனவர்கள் சேர்க்கப்பட்டு, அவர்கள் கையில் துப்பாக்கி அளிக்கப்படும் என்று நான் பேசியது வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என்று வழக்கு பதிந்திருக்கிறார்கள்.

இதனை தான் பலமுறை பேசியுள்ளேன்.  ஆனால் தற்போது திடீரென வழக்குப் பாய்ந்துள்ளது.   இது மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டமிட்ட சதி  ஆனால் அதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை”  என்று சீமான் தெரிவித்தார்.