19 வருடங்களாக வாடகை  தராத சீமான்! நீதிமன்றம் மூலம் வீட்டை மீட்ட முதியவர்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் குடியிருக்கும் வீட்டுக்கு 19 வருடங்களாக   வாடகை தராமலும் காலி செய்ய மறுத்தும் வந்த நிலையில் வீட்டு உரிமையாளரான முதியவர், நீதிமன்றம் சென்று சீமானிடமிருந்து வீட்டை மீட்டுள்ளார். திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறார் சீமான். சாரதா என்பவரின் பெயரில் உள்ள அந்த வீட்டை அவரது கணவர் குமார் பராமரித்து வந்தார். குமார் வீட்டை காலி செய்யச் சொல்லியும் சீமான் மறுத்ததாகவும், 19 வருடங்களாக 45 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

சீமான்

இது குறித்து வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர் வி.எஸ். கோபு முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:

“இந்த பதிவு சீமானை அசிங்கப்படுத்த அல்ல. இனி ஒரு காலம் இது போன்ற தவறை யாரும் செய்யாதீர்கள் என்பதற்கே.

தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில் 19 ஆண்டுகாலமாக நுழைய முடியாமல் பரிதவித்த பெரியவரின் நிம்மதி பெருமூச்சை இன்று கண்டேன்.

வீட்டு உரிமையாளர்

ஆனந்த கண்ணீரோடு, அவரது இடத்தில் அங்குமிங்கும் நடந்து பார்த்து பரவசம் அடைந்தபோது என் கண்களும் கலங்கியது.

இத்தனை ஆண்டுகாலமாக 4500000 ற்கு மேல் வாடகை பாக்கி, பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல்.

ஒருவழியாக இன்று என்னால் அதற்கு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தனைக்கும் சீமான் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல.

வழக்கறிஞர்

உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குனராக தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் .

முகநூல் பதிவு

வாடகை நிர்ணயம் செய்த வழக்கில் வெற்றி, வீட்டை காலி செய்ய சொன்ன வழக்கில் வெற்றி, மேல்முறையீடு வழக்கில் வெற்றி, தீர்ப்பை செயல்படுத்தும் வழக்கிலும் இன்று இறுதி வெற்றி.

நீதிமன்ற ஆவணம் 1

இன்று இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து, மனம்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான்.

ஒரு பக்கம் அவர் வாழ்ந்து வளர்ந்த வீட்டை, சட்டத்தின் வழியில் பிடுங்கி, உரிமையாளர் வசம் ஒப்படைக்கும்போது சீமானுக்காக சற்று கவலையுற்றாலும், சொத்தை சம்பாதித்தவரின் முகத்தில் மகிழ்ச்சியை காணும்போது நான் நேர்மையாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறேன் என மனம் நிம்மதி அடைகிறேன்.

நீதிமன்ற ஆவணம் 2

இதன்மூலம் அதிகாரம் மிக்க தலைவர்களுக்கு நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

நீதிமன்ற ஆவணம் 3

அப்பாவி மக்களின் சொத்துக்களை பறித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல என்பதை ஜெயலலிதாவின் வாழ்க்கையை படித்து தெரிந்துகொள்ளுங்கள் என்பதே. நன்றி
அன்புடன் :வழக்கறிஞர் V.S.கோபு” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.