சீமான் வாடகைதாரர் இல்லை : வன்னியர் சங்கம் ஆக்கிரமிப்பை அகற்றட்டும்!: வழக்கறிஞர் கோபுவுக்கு சீமான் தரப்பு பதில்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிடியிலிருந்து முதியவரின் சொத்து மீட்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர் கோபு என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருதார்.

அதில், “சென்னை சாலிகிராமம் பகுதியில் 19 ஆண்டுக்காலமாக ஒரு முதியவரின் வீட்டில் வாடகை கொடுக்காமல் தங்கியிருந்தார் சீமான். இத்தனை வருட காலமாக, ரூ.45,00,000-க்கும் மேல் வாடகை பாக்கி இருக்கிறது. பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல். ஒருவழியாக இன்று என்னால் அதற்குத் தீர்வு கிடைத்தது என நினைக்கும்போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன்.

இத்தனைக்கும் சீமான் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல. உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டுச் சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குநராகத் தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தைவிட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார். இன்று இதுவரை தான் செய்த தவற்றை உணர்ந்து, மனந்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான்” என பல்வேறு குற்றச்சாட்டுகள் சீமான் மீது சுமத்தியிருந்தார் வழக்கறிஞர் கோபு.

கோபு – சீமான்

பிறகு சில மணி நேரத்தில் அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார். ஆனால் அப்பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. (இது குறித்து patrikai.com இதழிலிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.)

இந்த நிலையில், நாம்தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர், சே.பாக்யராசன் தனது முகநூல் பக்கத்தில், வழக்கறிஞர் ராவணன் பதிவை பகிர்ந்திருக்கிறார்.

“வாடகை வீடு-வழக்குஉண்மை தகவல்கள்..” என்ற தலைப்பில் உள்ள அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

“பாசத்திற்குரிய வழக்கறிஞர் தம்பி AS கோபு வெளியிட்ட கருத்துக்களை பார்க்கும்போது தம்பி கோபு இவ்வளவு நல்லவரா என நினைக்க வேண்டியிருக்கு,
வழக்கறிஞர் தன்னுடைய வழக்கை நல்ல முறையில் நடத்தி வழக்காடிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதும் ,அதை நினைத்து மகிழ்ச்சி அடைவதும், தேவையான வழக்கறிஞர் சம்பளத்தை வாங்குவதும் இயற்கையே. ஆனால் இங்கு உண்மையை தாண்டி உள்நோக்கத்துடன் அரசியல் செய்வதும் சீமான் மீது‌ குற்றச்சாட்டு வைப்பது நல்ல வழக்கறிஞருக்கு அழகில்லை.

சகோதரர் சீமான் பத்தாண்டுகளுக்கு முன் வாடகைக்கு குடியிருந்த வீட்டை ஆகாயத்தில் இருந்து குதித்து சீமானிடம் இருந்து சாவியை பெற்று உரிமையாளரிடம் கொடுத்ததைப் போல புளங்காகிதம் அடைந்து உள்ளார் கோபு. சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகள் கிடைப்பது மிகவும் கடினம் என்பதும் இருப்பவர் தொடர்ந்து அதே வீட்டில் வசிக்கலாம் என நினைப்பது அனைவரும் அறிந்ததே.

வாடகைக்கு இருந்த வீட்டை விட்டு பல ஆண்டுகள் முன் வெளியேறி வேறு வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார் சகோதரர் சீமான் என்பது அவரை சந்திக்கும் அரசியல் தலைவர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் தெரிந்ததே.

வாடகைக்கு குடியிருந்த பழைய வீட்டில் அவருடைய உறவினர்கள் வாடகைக்கு தொடர்ந்து இருந்து வருகின்றனர் . அந்த வீட்டின் உரிமையாளர் பெரியவர் வீடு இல்லாமல் நடுத்தெருவில் ஒன்றும் நிற்க வில்லை அவரும் சொந்த வீட்டில் குடியிருக்கிறார். புதிய வாடகைதாரரிடம் தவறாமல் வாடகை வாங்கிக் கொண்டிருந்தார். உரிமையாளருக்கு பேராசையால் வாடகை தொகையை அதிகரித்து வாடகை வசூலித்து வந்தார் அதிக வாடகைக்கு
ஆசைப்பட்டு வழக்கு தொடர்ந்து குடியிருந்தவர்களை வெளியேற்ற முயற்சி செய்தார்.

பாக்யராசன் முகநூல் பக்கத்து பதிவு

வீட்டின் உரிமையாளர் குடி இருப்பவரை காலி செய்ய வேண்டி வழக்கு தொடுப்பதும், குடியிருப்பவர் சட்டவழிமுறை இல்லாது வீட்டின் உரிமையாளர் காலி செய்ய சொல்வதை எதிர்த்து வழக்குத் தொடுப்பது இயற்கையே. கோபு நீங்கள் சொல்வது போல சகோதரர் சீமான் உண்மையான வாடகைதாரரே இல்லை. அவரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் என எந்த ஞானக்கண் கொண்டு பார்த்தீர்கள்.

வழக்கில் வெற்றியோ, தோல்வியோ இதில் ஒன்று இறுதியில் கிடைக்கும் இங்கு வழக்கு முடித்து கொண்டது. வாழக்காடிகள் வாய்ப்பும், வசதியும் இருந்தால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை வழங்கடலாம்.இன்னும் பல ஆண்டுகள் வழக்கை நடத்தலாம்,இன்னும் இடையில் வழக்கு நடக்கும் போது சீமானின் உறவினர்ளிடம் பணம் இருக்கும் அவர்களையே வீட்டை வாங்கிக்கொள்ள சொல்லியும், வீட்டுஉரிமையாளிடம் குறைந்த விலையில் முடித்து தருவதாகவும் இதனால் வக்கீல்களுக்கு ‌நல்ல வருவாய் வரும் என இடையில் வக்கீல்கள் உங்களுக்கு தெரியாமலா பேசினார்கள்?

எல்லாம் அறிந்து இருந்தும்,வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பாட்டாளி சகோதரர் கோபு தவறான தகவலாக நீதிமன்றத்திற்கு வந்து சகோதரர் சீமான் சாவியை ஒப்படைத்ததாக சொல்கிறார். சீமான் நீதிமன்றம் வந்ததை இவர் பார்த்தாரா ?
தான் குடியில்லாத வீட்டை அடுத்தவரிடம் இருந்து சாவியை வாங்கிக் கொடுக்க சீமான் என்ன கட்டப் பஞ்சாயத்து செய்பவரா?
சொத்தை சம்பாதித்தவரின் முகத்தில் மகிழ்ச்சியை காணும்போது நான் நேர்மையாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறேன் என் மனம் நிம்மதி அடைகிறேன் என்று கூறுகிறீர்கள், மகிழ்ச்சி, வழக்கறிஞர் கோபு அவர்களே அப்படியே,

சென்னை, கிண்டி, பட் ரோட்டில் உள்ள அருள்மிகு வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான பழடைந்த கட்டிடம் அனைத்து மேல் நீதிமன்றங்களிலும் கட்டிடத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க சொல்லி தீர்ப்பு வந்த பின்னும் இன்னும் ஒப்படைக்காமல் வன்னியர் சங்க அலுவலகமாக அமைந்துள்ள இடத்தை நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் உங்களை வாழ்த்துவார்கள்.

சென்னையும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் அநியாயமான ஆக்கிரமிப்புகளையும் கவனத்தில் கொண்டு அதையும் மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள். எல்லோரும் வாழ்த்துவார்கள்.

மேலும் நீங்கள் சொல்வது போல தலைவர்களுக்கு அப்பாவி மக்களின் சொத்துக்களை பறித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல என்பது, நீங்கள் யாரையாவது தலைவராக ஏற்றிருந்தால் அவர்களிடம் பேசி அங்கு இருந்து ஆரம்பியுங்கள் மாற்றத்தை கோபு.

சகோதரர் சீமான் மத்திய அமைச்சராக இருந்ததில்லை, சென்னை மத்திய பகுதியான தி.நகரில் சொந்த வீடு இல்லை. சென்னையின் கடைக்கோடி போரூரில் ஒத்தை வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த வழக்கிற்கும் சீமானுக்கு என்ன சம்பந்தம் எப்போதே குடியிருந்ததை தவிர, சீமானை களங்கம் படுத்த உங்களை தூண்டுவது யார்?

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பாதீர்கள் என்று மட்டுமே இறுதியாக சொல்லத் தோன்றுகிறது அன்பு சகோதரர் வழக்கறிஞர் கோபுக்கு.

இரா.இராவணன்,
வழக்கறிஞர்” – இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.