சென்னை:
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி நடத்தப்படும் வாகன பேரணிக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை விடுவிக்கச் சொல்லி வேலூரில் இருந்து சென்னை தலைமை செயலகம் வரை வாகன பேரணி நடக்க இருக்கிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி,   “பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார்.  அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், ‘பேரறிவாளன் நிரபராதி’ என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை.

விஜய் சேதுபதி - சீமான்
விஜய் சேதுபதி – சீமான்

25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், “விஜய் சேதுபதி தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்.  பேரறிவாளன் குறித்து அவர் ஏன் பேச வேண்டும்” என்கிற தொணியில் நாம் தமழர் கட்சியைச் சேர்ந்த சிலர் முகநூல் உட்பட சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பேரறிவாளனுக்காக குரல் கொடுத்த தம்பி விஜய் சேதுபதியை பாராட்டுகிறேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீமான் எழுதியுள்ள முகநூல் பதிவு:
“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்.. அன்பின் நெகிழ்ச்சியோடு…  -சீமான்…” – இவ்வாறு சீமான் பதிவிட்டிருக்கிறார்.