நிவாரணப்பொருட்களுடன் சென்ற சீமான்: குற்றவாளிபோல் நடத்தி  அவமதித்த கேரள காவல்துறை! ( வீடியோ)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற சீமானை, அம்மாநில காவல்துறையினர் குற்றவாளி போல தரையில் உட்காரவைத்து அவமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும் மழை  வெள்ளத்தால் அண்டை மாநிலமான கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. லட்சக்கணக்கானோர் வீடுவாசல் இழந்தனர்.  350க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

வீடிழந்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளம் வடிந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் இருந்து சென்றுவிட்டாலும் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இந்தியா முழுமையில் இருந்து பல்வேறு மாநில அரசுகளும், தனியார் அமைப்புகளும், பிரபலங்களும், தனிப்பட்ட நபர்களும் நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தபடியே இருக்கிறார்கள்.

சீமான்

தமிழகத்தில் இருந்து பிரபல நடிகர்களும், தனிப்பட்ட நபர்களும் நிதி உதவி அளித்தார்கள். கட்சிகளும் நிதி உதவி அளித்தன. நாம் தமிழர் கட்சியினரும் நிவாரணப்பொருட்களை அனுப்பினர்.

இந்த நிலையில நேற்று மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் விதமாக நிவாரணப் பொருட்களுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது கட்சியினர் கேரள மாநிலம் கோட்டயம் சென்றனர். அங்கு , சங்கனாசேரி முகாமிற்குச் சென்று நிவாரணப் பொருட்கள் அளித்தனர்.

பிறகு தமிழகம் திரும்பிய அவர்களை,கோட்டயம் பகுதியில்  கேரள காவல்துறையினர் வழி மறித்தனர். சீமான் உள்ளிட்டவர்களை கோட்டையம் காவல் நிலைய வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இரவு நேரத்தில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தனர்.

சீமான் உள்ளிட்டோர் சென்ற வாகனங்களில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் இருந்ததை, கேரள பாஜகவினர் எதிர்த்தனர். அவர்களது புகாரின் பேரில் கேரள காவல்துறையினர் விசாரித்ததாக கூறப்படுகிறது.

கோட்டயம் காவல் வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர்  தரையில் உட்காரவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

பாக்யராசன்

“ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர் சீமான். அவர் உதவி செய்ய வந்திருக்கிறார். ஆனால் அவரையும் குற்றவாளியைப் போல்  விசாரித்தார்கள் கேரள காவல்துறையினர்” என்று நாம் தமிழர் கட்சியினர்  தலைமை செய்தித்தொடர்பாளர் சே.பாக்கியராசன் நம்மிடம் தெரிவித்தார்.

 

வீடியோ: