மதுரை:

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் பேசும்போது, ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசினார். இது தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் புகாரின் பேரில், சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  “ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது. ராஜீவ் கொலை நடந்தபோது மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது  எந்த அளவுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதோ அதை மீண்டும் உருவாக்கக்கூடிய வகையில் சீமான் கருத்து கூறியிருக்கிறார்” இது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

மேலும், “பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியில் யார் பங்கேற்க வேண்டும் என்ற பட்டியலை தயாரித்ததில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றவர், யாரும் புறக்கணிக்கப்படுவது இல்லை என்று கூறியகூரு, பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சி யில் முக்கிய நிர்வாகிகள் இடம் பெறுவதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை என்று விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொன்னார், “தமிழகத்தில் பாஜகவின் அடிமை ஆட்சியாக அதிமுக உள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். அப்படியென்றால் 1998-ல் எங்கள் ஆட்சியில் அங்கம்வகித்த திமுக, அப்போது எங்களிடம் அடிமையாக இருந்ததா? எனக் கேட்க விரும்புகிறேன்” என்று  எதிர்க்கேள்வி விடுத்தார்.