Random image

திரைவிமர்சனம்: சீமராஜா

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் 11-வது படம் இது. (எதெத்துக்கெல்லாம் கணக்கு வச்சிருக்க வேண்டியிருக்கு!) ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களுக்குப் பிறகு பொன்ராம் இயக்கும் மூன்றாவது திரைப்படமும் இதுவே. (ரிப்பீட்டர் பிராக்கெட் கமெண்ட்!)

சிங்கம்பட்டி ஜமீனின் இளைய வாரிசு சீமராஜா. (சிவகார்த்திகேயன்)  பெரிய ராஜாவான ‘அரியராஜா’ (நெப்போலியன்) மற்றும் அம்மா ரஞ்சனியுடன் அரண்மனையில் வசித்து வருகிறார் சீமராஜா.

ஊருக்கு உதவுவது, பஞ்சாயத்துகளில் கலந்துகொள்வது என்று பொழுதைப் போக்கி வருகிறார் சீமராஜா. இவருக்கு வலது கை சூரி. அல்லக்கை என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

“சமஸ்தானத்தின்”  கணக்குப் பிள்ளையான  இவருக்கு மூன்று மனைவிகள். சீமராஜாவை எவராவது வாழ்த்திப் பேசினால் உடனே அவர்களுக்கு பணம் கொடுத்து நன்றி சொல்ல வேண்டிய முக்கியமான வேலைதான் சூரிக்கு.

இந்த நிலையில் சீமராஜா வளர்த்து வரும் புறாவைக் காணவில்லை.  தங்களது பரம்பரை எதிரி ஊரான புளியம்பட்டிக்குள்தான் புறா இருக்கிறது என்று அங்கு மாறு  வேடத்தில் நுழைகிறார்கள் சீமராஜாவும், கணக்குப் பிள்ளை சூரியும்.

ஆமாம்.. அங்கே ‘சுதந்திரச் செல்வி’யை (சமந்தா)  பார்க்கிறார்கள். அப்புறம் என்ன

சீமராஜாவுக்கு கண்டதும் காதல்.

சமந்தா பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியர். கம்பு சண்டையில் பெரிய ஆள்.

தன் பின்னால் சுற்றிவரும் சீமராஜாவை அலைய விடுகிறார் சமந்தா. சினிமா இலக்கணப்படி அதற்குள் இரண்டு டூயட்டுகள்!

இதற்கிடையே.. நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டிருக்கும் இரண்டு ஊர்களுக்கும் பொதுவான சந்தை மூடப்பட்டிருக்கிறது.  இந்த நிலையில், “மல்யுத்தப் போட்டியில் எந்த ஊர்க்காரர்கள் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே சந்தைக்கு பொறுப்பேற்கலாம்” என்று முடிவாகிறது.

இப்படி தீர்ப்பளிப்பவர்,  ‘கறிக்கடை கண்ணன்’ என்னும் லால்.

இவர் புளியம்பட்டியின் முக்கிய பிரமுகர்.   இவர்  சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தின் முக்கிய எதிரி.  இவரது இரண்டாவது மனைவியான ‘காளீஸ்வரி’ ( சிம்ரன் ) அதிரடியான மனுசி.

மல்யுத்தப் போட்டியில் வழக்கம்போல நாயகனான சீமராஜா வெற்றி பெறுகிறார். லால் தோல்வி அடைகிறார்.

வழக்கம்போல பெருந்தன்மையுடன்,  பாதி இடங்களை புளியம்பட்டிக்காரர்களுக்கு  விட்டுக் கொடுக்கிறார் நாயகன் சீமராஜா.

தோல்வியடைந்த  ஆத்திரத்தில் இருக்கும்  லால் சமந்தாவை ‘தன்னுடைய மகள்’ என்று சொல்லி இழுத்துப் போகிறார். மேலும், சீமராஜாவுக்கு தன் மகளை கட்டித் தர மாட்டேன் என்று சொல்லி  சமந்தாவை சிறை வைக்கிறார் லால்.

சீமராஜா காதல் வெற்றி பெற்றதா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

சீமராஜா – சமந்தா காதல். விளைநிலங்களை விற்பனை செய்யும் விவசாயிகளின் பரிதாப நிலை,  14-வது நூற்றாண்டில் தமிழகத்துக்குள் படையெடுத்து வந்த மாலிக்காபூரின் படைகளை எதிர்த்து போரிட்ட சிங்கம்பட்டி ஜமீன்தாரின் கதை.. என்று  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று கதைகளை சேர்த்து முடிச்சுப்போட்டிருக்கிறார் இயக்குநர்.

இதுவரை வந்தது  போல காமெடி ஹீரோவாக இல்லாமல், அதிரடி நாயகனாக வருகிறார்  சிவகார்த்திகேயன். அதற்காக சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி ரேஞ்சுக்குக் கொண்டுபோயிருப்பது ஓவர்தான்.

சூரி வழக்கம்போல் காமடி செய்கிறார். வழக்கம்போல சில காமெடிக்கு சிரிப்பு வருகிறது.

சிங்கம்பட்டி ஜமீன் கதையை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் போர்க்கள காட்சி மிகச் சிறப்பு.

சமந்தா.. இயல்பாக நடித்திருக்கிறார். டூயட் பாடியிருக்கிறார். கூடுதலாக கம்பாட்டம் ஆடியிருக்கிறார்.

சிம்ரன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் க்ளோஸப் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். வாழ்ந்துகெட்ட மனுசி என்று பரிதாபம் மேலிடுகிறது.

லால்ம், நெப்போலியன் இருவரும் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  பாலசுப்ரமணியம் சிறப்பாக உழைத்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில், போர்க்காட்சிகளில் கூடுதலாக ரசிக்கவைக்கிறார்.

“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலத்தை விற்காமல் வாடகைக்கு விட்டு, அதை வைத்து விவசாயிகள் பிழைத்துக் கொள்ளலாமே..” என்று புது ஐடியா கொடுத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

சீமராஜா – ரசிக்கலாம்

You may have missed