சிகுமாரின் உறவினரும் அவரது படத்தயாரிப்பு நிறுவன நிர்வாகியுமான அசோக் குமார்,  “சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கிவிட்டு மிரட்டினார்” என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தமிழ்த் திரைப்பட வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விசால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உட்பட பலர், அசோக்குமார் மரணத்துக்குக் காரணமான அன்புச்செழியனை உடனடி.யாக கைத செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதே நேரம் சுந்தர் சி, தேவயானி உட்பட சிலர், அன்புச்செழியன் நல்லவர் என்றனர்.

 

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி,  அன்புச்செழியனுக்கு ஆதரவாக ‘எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இன்றைய நடிகர்கள் இல்லை. அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நான் நியாயத்தின் பக்கமே நிற்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.

ரசிகர்கள் பலரும் சீனு ராமசாமியின் கருத்துக்கு எதிராக பின்னூட்டம் இட்டனர்.  சீனு ராமசாமி சாதிப் பாசத்தில் முட்டுக்கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.  இதையடுத்து, சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பதிந்த ட்வீட்டை நீக்கினார்.

இந்நிலையில், சீனு ராமசாமி, அசோக் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்தப்பதிவில், “திரு.சசிகுமாரும் நானும் இணைந்து ஒரு படம் வேலை செய்ய வேண்டும் என்று மிகுந்த அன்புடனும்,மரியாதையுடனும் தனது வாழ்த்துக்களையும் சொல்லி அனுப்பி வைத்த அசோக்குமார் தற்கொலை ஜீரணிக்க முடியாத வேதனை.

ஏனென்றால் நான் தர்மதுரை படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் மனைவியை விட்டு பிரிந்து இருந்த என் தம்பி சதீஷ் இதே போல் தூக்கிட்டு இறந்தான்.அவன் நினைவு வராத நாளே எனக்கு இல்லை.

நான் தயாரிப்பாளர் இல்லை.அதேபோல் வட்டிக்கு வாங்கி படம் எடுக்கும் தைரியமும் எனக்கு இல்லை.

மற்றபடி நான் இடதுசாரி கொள்கைகளில் தீவிர பற்று உடையவன்.எனக்கு சாதி,மதம் …அந்த எண்ணமே இல்லை.

தயாரிப்பாளர் திரு.அசோக்குமார் அவர்களின் கரங்களால் தொடங்கப் பெற்று  இருக்க வேண்டிய இந்த படம் தொடங்கப்படாமல் போய் விட்டது வேதனை அளிக்கிறது.

எப்படி பார்த்தாலும் உயிர் பிரிவு,உறவு பிரிவு,மறக்க முடியாத நினைவுகள் இவற்றில் இருந்து சசிக்குமார் மீண்டு வந்து வெற்றிகரமாக வலம் வர வேண்டும் என்பதே இந்த நாளில் நான் முன் வைக்கும் பிரார்த்தனை.” என்று  சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.