வியாபாரமும் கலையும் முட்டிக்கொண்ட துயரத்தில்..!: சீனு ராமசாமி வருத்தமான ட்விட்

அசோக் குமார் – சீனு ராமசாமி

டிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவருமான அசோக்குமார் என்பவர் கடந்த 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஃபைனான்சியர் அன்பு, தான் கொடுத்த கடனுக்கு வட்டியாக அதிகத் தொகை வசூலித்ததுடன் மிரட்டலும் விடுத்ததால் தற்கொலை செய்துகொண்டதாக அசோக்குமார் கடிதம் எழுதிவைத்திருந்தார்.

இந்த நிலையில் அன்புவை கைது செய்ய வேண்டும் என்று விசால் உட்பட திரைத்துறையினர் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். அதே நேரம் விஜய் ஆண்டனி, தேவயானி, சுந்தர் சி போன்ற சிலர், அன்புச்செழியன் நல்லவர் என்று பேசி வருகிறார்கள்.

இதற்கிடையே இயக்குநர் சீனு ராமசாமியும் அன்புச்செழியனை உத்தமர் என்று ட்வீட் செய்தார்.  இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து பின்னூட்டம் இட்டனர். இதையடுத்து சீனு ராமசாமி அந்த ட்விட்டை நீக்கினார்.

அடுத்து, தான் அன்புச்செழியன் ஆதரவாளன் அல்ல என்று பதிவிட்டார்.

இந்த நிலையில், கடித வடிவிலான பதிவொன்றை ட்விட் செய்திருக்கிறார் சீனு ராமசாமி. அதில், “நெஞ்சம் நிறைந்த நண்பர்களுக்கு வணக்கம்.

பார்த்துப்பேசி ஒரு படம் எங்கள் கம்பெனி தயாரிப்பில் செய்யுங்கள் என்று வாக்குறுதியும் நம்பிக்கையும் தந்த அன்பர் நண்பர் திரு. அசோக்குமாரின் துக்க்கரமான முடிவு நெஞ்சடைத்து நான் உறைந்தேன். என் குடும்பத்திலும் இது போன்ற இழப்புண்டு. இதற்கு ஆறுதல் எவரும் சொல்ல முடியாது. நினைவில் கனவில் வந்த நிற்பர்.

நான் திரு. அன்புச் செழியனின் சாதிக்காரன் இல்லை. வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவன் இல்லை. ஏன், நடிகர்களின் தேதியை பெற்று ஃபர்ஸ்ட் காப்பி கூட எடுக்கும் எண்ணம் இல்லை. சம்பளத்துக்கு மட்டும் படம் இயக்க வேண்டும் என்று நினைப்பவன்.

70 வருட சினிமாவை பைனான்சியர்கள்தான் இயக்கி உள்ளனர். அரசு லோன் கிடையாது. சினிமாக்காரனுக்கு வீடு கூட கிடையாது.

ஒரு முறை விமான நிலையத்தில் செழியன் சிரித்துக்கொண்டே, “20 கோடி பேலன்ஸ் அவர் தரணும்.. இவர் முப்பது கோடிண்ணே..! டீ சாப்புடுறீங்களா..” என்றார். அவ்வளவுதான் எனக்கு அவரைப் புரியும். மூன்று பைசா வட்டிக்குத் தருவாராம்.

எங்கள் சங்கங்கள் இணைந்து சில நிபந்தனைகள் இட வேண்டும். அதிக பணம் பெறுதல், தேவைக்கு அதிகமாக வட்டியும் கட்டுதல் போன்ற சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

வியாபாரமும் கலையும் முட்டிக்கொண்ட துயரத்தில் உழைப்பாளி அசோக்கின் பிரிவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.