“ஆத்மாவாவது கீத்மாவாவது..” :சீதக்காதி” திரை விமர்சனம்

மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன் அவர்களின் முகநூல் பதிவு:

த்திகம், ஆன்மீகம், ஆன்மீக அரசியல் – அத்தனையிலும் விற்பனைச் சரக்காக இருப்பது ஆத்மா என்ற நம்பிக்கைதான். ஆண்டவனைப் பற்றிய கற்பனைக்கும் மூத்தது ஆத்மா பற்றிய சிந்தனை. தத்துவத் தளத்தில் அறிவியல் கைத்தடியை ஊன்றி நின்று எதிர்கொள்ள வேண்டியவற்றுள் ஒன்றுதான், தேவைப்பட்டால் அந்தக் கைத்தடியை ஆயுதமாகச் சுழற்றி விரட்ட வேண்டியவற்றுள் ஒன்றுதான் ஆன்மா.

இப்படி சித்தாந்தப்பூர்வமாகப் பேசுகிற ஒரு விசயத்தைக் காட்சிப்பூர்வமாகக் கலையாக்க முடியுமா? நடுவில் கொஞ்சம் பக்கம் காணாமல் போனதில் சுவையானதொரு திரைப்படமாகக் கண்டுபிடித்துக் கொடுத்தவர்கள் 21ம் நூற்றாண்டின் சீதக்காதியை அறிமுகப்படுத்தி அப்படியொரு கலையாக்கத்தை சாதித்திருக்கிறார்கள். முன்பு வேலு பிரபாகரன், கடவுள் என்ற கதாபாத்திரத்தைப் படைத்து, அதன் மூலம் உலகத்தைப் படைத்த கடவுள் என ஒன்றுமில்லை என்று நிறுவினார். இப்போது பாலாஜி தரணிதரன், செத்துப்போன ஒரு நாடக நடிகரின் ஆத்மா என்பதாக உலாவவிட்டு ஆத்மாவாவது கீத்மாவாவது என்று கேட்டிருக்கிறார்.

மக்கள் முன்பாக மட்டுமே நடித்துப் பாராட்டையும் விமர்சனத்தையும் நேரடியாக எதிர்கொள்ள விரும்பியதால் திரைப்படத்தில் நடிக்க மறுத்தவர் அய்யா ஆதிமூலம். சிறுவயதிலிருந்து நடித்து வருகிற அவர் கண் முன்பாக நாடக ரசிகர்கள் கூட்டம் சுருங்குகிறது, மேடையில் நடித்துக்கொண்டிருக்கிறபோதே மூச்சுநின்றுவிட, அவர் செத்துவிட்டாலும் அவருடைய ஆத்மா நாடக அரங்கைவிட்டு வெளியே போய்விடுமா என்று அவருடைய விசுவாச மேலாளர் கேட்க, தொடர்ந்து நன்றாக நடிக்கிறவர்களின் உடல் வழியாக அய்யாவின் ஆத்மாதான் நடிக்கிறது என்ற செய்தி பரவ…. அப்ப்பா! என்ன கற்பனை!

ஆத்மாவாக அய்யா திரைப்படங்களில் நடிக்க ‘புக்’ செய்யப்படுகிறார், ‘அட்வான்ஸ் தரப்படுகிறது’, நடிக்கிறவர்கள் பாராட்டுப்பெற அய்யா புகழ்பெறுகிறார் – கட்டவுட், பாலாபிஷேகம் அளவுக்கு. திடீரென்று அய்யாவின் ஆத்மா கொலை செய்யப்பட்டுவிட்டதாக செய்தி பரவ, பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்துள்ள நீதிமன்றத்திற்கு இந்த வழக்கும் வருகிறது! இதற்கு மேல் கதையைச் சொல்வது நல்லதொரு சினிமாவின் ஆத்மாவைக் கொலை செய்வதாகிவிடும் – அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்.

ஆத்மா இல்லை என்றால், முதலில் அந்த நடிகர்கள் சிறப்பாக நடித்தது எப்படி? பின்னர் சாதாரண உணர்வுகளைக் கூட வெளிப்படுத்த முடியாமல் சொதப்புவது எப்படி? ஆதிமூலம் உயிரோடு இருந்தபோது ஒரு இளம் நடிகர் “நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரியே நடிக்கிறேனய்யா” என்கிறார். “நான் சொல்லிக்கொடுத்தது போல நடிக்க நீ எதுக்கு? நீயாக நடி,” என்கிறார் பெரியவர். அப்படிப்பட்டவர் ஆத்மாவாக மற்றவர்களுக்குள் இறங்கி, அவர்களை அவர்களாக நடிக்கவிடாமல் தன்னுடைய நடிப்பாக மாற்றுவாரா?

இக்கேள்விகளுக்குக் கிடைக்கிற பதில்: கலை நேர்மை! கலை நேர்மையோடு நடிக்க முயன்றவர்கள் அய்யா வழியில் நடந்து வெற்றிபெறுகிறார்கள், கலையை அலட்சியப்படுத்துகிறபோது தடம் புரள்கிறார்கள், தோல்வியடைகிறார்கள். படத்தில் எங்கேயும் இந்தக் கருத்து ஒரு வசனமாகச் சொல்லப்படவில்லை. மொத்தப்படமும் இதைச் சொல்கிறதே!

“தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது கலை” என்று நீதிபதி மூலமாகச் சொல்கிறார் இயக்குநர். இல்லை. கலையும் கலை ஆக்கமும் கலை நோக்கமும் கலை நேர்மையும் தர்க்க நியாயங்களுக்கு உட்பட்டவைதான். கலையை விளக்க முடியாது என்ற முடிவுக்கு வருவதானால் ஆத்மாவை விளக்க முடியாது, கடவுளை விளக்க முடியாது என்று சொல்கிற கண்டவர் விண்டவர் கதையாகிவிடும் தரணிதரன்.

ஆயினும், தமிழ்சினிமாவுக்கு என்னவோ நடந்துவிட்டது போல, மாறுபட்ட முயற்சிகளால் பார்க்கவைத்து, பேசவைக்கிற படங்களின் வரிசையில் இது் இளம் தலைமுறையினரின் மற்றொரு பெருமைக்குரிய படைப்பு. வெறும் தத்துவ வாதமாக இல்லாமல், வாய்விட்டுச் சிரிக்கவும், மனம் குலுங்கிச் சிந்திக்கவும் வைப்பது கூடுதல் சிறப்பு.

மொத்தப் படத்தில் கால்வாசி நேரம்தான் வருகிறார் விஜய் சேதுபதி. ஆனால் படம் முழுக்க, காட்சிக்குக் காட்சி அவர் இருப்பது போன்ற உணர்வு இன்னொரு புதிய அனுபவம். இத்தகைய பாத்திரத் தேர்வுகளின் மூலமாகவும், ஈடுபட்டு நடிப்பதன் மூலமாகவும் அவரும் கலை நேர்மை பற்றிய செய்தியைத்தான் சொல்கிறார்.

படப்பிடிப்புகளை நேரில் பார்த்திருப்பவர்கள் கூடுதலாக ரசிக்க முடிகிறது. பார்த்திராதவர்கள் படப்பிடிப்பின்போது ஒரு சிறிய உணர்வு வெளிப்பாட்டுக்குக் கூட எவ்வளவு மெனக்கிடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. சரஸ்காந்த் ஒளிப்பதிவுத் தட்டில் கோவிந்த் வசந்தா இசை ஒரு விருந்தாக்கப்பட்டிருக்கிறது. மௌலி, அர்ச்சனா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட மூத்தோரும் இளையோரும் சேர்ந்து பரிமாறியிருக்கிறார்கள்.

செத்தும் கொடுத்திருக்கிறார் இந்த சீதக்காதி – ஒரு கலைக் கொள்கையை.

 

கார்ட்டூன் கேலரி